Pages

Friday, October 5, 2012

தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்க யாக பரணி என்ற நூலை எழுதியவர் ஒட்டக் கூத்தர். 

கலிங்கத்துப் பரணி போல், இதிலும், கடை திறப்பு என்ற பகுதி உண்டு. 

கணவனோ, காதலனோ அவர்களின் மனைவியையோ, காதிலியையோ கெஞ்சி கூத்தாடி கதவை திறக்கச்  சொல்லும் பாடல்கள்.

காம நெடி கொஞ்சம் தூக்கலான பாடல்கள்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்கையை, குறிப்பாக இல்லற வாழ்கையை அனுபவித்தார்கள் என்பதை விளக்கும் பாடல்கள்.

நீண்ட நாள் கழித்து கணவன் வருகிறான்.

அவனைக் காண வேண்டும் என்று, அவனைக் கட்டி அணைக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறாள் அவன் மனைவி.

அவன் வந்து விட்டான்.

ஓடிச்சென்று அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.

அவனுக்கும் அவள் மேல் அவ்வளவு ஆசை.

இருவரும் ஒருவரை ஒருவர் ஈருடல் ஓர் உயிராய் இறுகத் தழுவி நின்றார்கள்.

அவர்கள் அப்படி உத்வேகத்துடன் கட்டி கொண்டு இருப்பது, காதலில் அணைந்துகொண்டது மாதிரியும் இருக்கிறது. ஆக்ரோஷமாய் இரண்டு எதிரிகள் ஒருவரை ஒருவர் மல் யுத்தத்தில் கட்டி பிடித்து சண்டை இடுவது போலவும் இருக்கிறது.

அப்படி கட்டி அணைக்கும் பெண்களே, கொஞ்சம் கதவை திறவுங்கள் என்று பாடுகிறான் கணவன்....

 
எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு
குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து
எளிவரும் கலவி புலவிபோல் இனிய
தெய்வ மாதர்! கடை திறமினோ!

பொருள்

எளிவரும் = ஆவலோடு, இரு கை விரித்து அணைக்க வரும் (எளி என்ற சொல்லுக்கு graceful simplicity , approachableness , சௌலப்யம் என்று அர்த்தம் கூறுகிறது தமிழ் அகராதி)   

கொழுநர் = கணவர்

புயமும் = கரங்களும்

நுங்கள் = உங்கள்

இருகுயமும் = இரண்டு மார்பகங்களும்

மண்டி = இதற்க்கு என்ன அர்த்தம் தெரியமா ? ஆச்சர்யமான வார்த்தை. 
மன்டுதல் என்றால் to get close together, crowded, pressed, to move swiftly, to collect together, to abound, to come in என்று பல பொருள். (மண்டி மிண்ட கண்டு உருண்டு அண்டர் ஓடாமல் வேல் தொட்ட காவலனே என்பார் 
அருணகிரிநாதர்)

எதிர் எதிர் விழுந்து = ஒருவருக்கு ஒருவர் எதிரில் வந்து விழுந்து 

எளிவரும் = எளிதாக வரும்

கலவி = உங்கள் கலவி

புலவிபோல் = சண்டை போல் இருக்கிறது, அப்படிப்பட்ட

இனிய = இனிய

தெய்வ மாதர்!  = தெய்வம் போன்ற பெண்கள, தேவதைகளே, 

கடை திறமினோ! = கதவ திறங்கம்மா 


2 comments:

  1. சரிதான். நல்ல இனிமையான கற்பனைதான்.

    ஒவ்வொரு பாடல் எழுதும்போதும், அது எழுதப்பட்ட வருடத்தைக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். இறுதியில், சின்னதாக, வளை அடைப்புக்குள் (bracket) ஒரு எண் மட்டும் தந்தால் போதும்.

    ReplyDelete
  2. கம்பர் காவியம்" என்னும் நூலில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை,
    கம்பர் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டே என வலியுறுத்தி அதற்குச் சான்றாக ஒரு
    தனிப்பாடலைக் காட்டுகிறார்.

    "ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூற்றொழித்துத்
    தேவன் திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச்
    சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
    காரார் காகுந்தன் கதை''.


    என்ற பாடலைக்கொண்டு "எண்ணிய சகாப்தம் எண்ணூற்றி ஏழின் மேல்'' என்ற
    செய்யுள் கொள்ளத்தக்கதன்று. "ஆவின் கொடைச்சகரர்" என்ற செய்யுளே கொள்ளத்தக்கது.
    கம்பன் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன் என்பதே தேற்றம்''
    (கம்பன் காவியம், பக்.96) என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.



    கம்பனும், ஓட்டகூத்தனும் சம காலத்தவர்கள் என்பதற்கு நிறைய கதைகள் உண்டு. அப்படிப் பார்த்தால், இந்த தக்க யாக பரணி எழுதப்பட்டது கி.பி. பனிராண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்.

    ReplyDelete