இராமாயணம் - உணவுக் கட்டுப்பாடு
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும். வீட்டில் நிறைய பலகாரம் செய்வார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தும் தின் பண்டங்கள் வரும்.
வந்ததை தூரவா போடா முடியும் என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் உண்டால் கூட உடம்புக்குத் தீமை தான்.
சாப்பிடாவிட்டால் கொடுத்தவர்கள் மனம் சங்கடப் படும்...என்ன செய்யலாம் ?
இராமாயணத்தில் ஒரு இடம். இராமன் குகனின் இருப்பிடத்தில் இருக்கிறான். குகன் தேனும், தினை மாவும், மீனும், பக்குவப் படுத்தி கொண்டு வந்து தருகிறான்.
இராமான் என்ன செய்தான் ? எல்லாவற்றையும் உண்டானா ?
ஆஹா, அருமையான உணவு..இனிமேல் எப்ப கிடைக்குமோ என்று ஒரு பிடி பிடிக்கவில்லை.
" நீ அன்போடு கொண்டு வந்த இந்த உணவு அமிழ்தை விட சிறந்தது ... நானும் இதனை இனிமையாக உண்டாதகக் கொள்" என்று சொன்னான். சாப்பிடவில்லை.
இராமன் உணவு கட்டுப்பாட்டை நமக்கு காண்பிக்கிறான்.
பாடல்
‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின்
பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான்.
பொருள்
அரிய = அருமையான பொருள்களை
தாம் உவப்ப,= மிகுந்த உவகையுடன்
உள்ளத்து அன்பினால் = உள்ளத்தில் பிறந்த அன்பினால்
அமைந்த காதல் = அமைந்த காதலால்
தெரிதரக் கொணர்ந்த என்றால், = தெரிந்து கொண்டு வந்தது என்றால்
அமிழ்தினும் சீர்த்த அன்றே? = அது அமிழ்தை விட சிறந்தது ஆகும்
பரிவினின் = பரிவுடன்
தழீஇய என்னின் = தரப்பட்டது என்றால்
பவித்திரம்; = அது புனிதமானது ஆகும்
எம்மனோர்க்கும் = எம் போன்றோர்க்கும் (தவம் செய்பவர்களுக்கு)
உரியன; = இது உரியதே (நாங்கள் இதை உண்ணலாம்)
இனிதின் = இனிமையுடன், மகிழ்ச்சியுடன்
நாமும் = நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான்.= உண்டோம் என்றான் . உண்ட மாதிரிதான் என்றான்.
வாயால் உண்ணவில்லை. மனத்தால் அந்த பிரசாதத்தை அங்கீகரித்தான்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உணவை உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தால், அது நம்மை வீட்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டே இருக்கும்.
இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி என்று பொருள். அயனம் என்றால் வழி, பாதை. உத்தராயணம், தக்ஷினாணயம் என்றால் சூரியன் வடக்கே மற்றும் தெற்கே போகும் வழி. இராமாயணம் என்றால் இராமனின் வழி.
உணவு கட்டுப்பாடு இராமன் காட்டிய வழி.
அந்த வழியே சென்று நாமும் நல வாழ்வைப் பெறுவோம்.
Superb. Timely poem.
ReplyDeleteWow amazing thanks
ReplyDeleteSuper explanation thank you
ReplyDelete