Pages

Monday, November 26, 2012

சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


கண்ணகி, காப்பியம் முழுவதும் அமைதியாகத்தான் இருந்தாள். தன் கணவன் கொலையுண்டான் என்று அறிந்தவுடன் புயலாக புறப்படுகிறாள். 

ஒரு புது பெண்ணை பார்க்கிறோம். கோபம். ருத்திரம். ஞாயம் வேண்டி போராடும் குணம். வெடிப்புற பேசும் ஆற்றல். இத்தனை நாள் இவை எல்லாம் எங்கிருந்ததோ என்று வியக்க வைக்கும் மாறுதல்கள். 

கையில் சிலம்போடு பாண்டியன் அரண்மனை வாசல் அடைகிறாள். அவள் கோவம் வாயில் காப்போனிடம் இருந்து வெடிக்கிறது. 

" வாயில் காப்போனே, இந்த மாதிரி முறை தப்பிய மன்னனிடம் வேலை செய்யும் வாயில் காப்போனே, போய் சொல் உன் மன்னனிடம், பரல் கொண்ட சிலம்பை கையில் ஏந்திய படி, கணவனை இழந்த பெண் வாசலில் நிற்கிறாள் என்று போய் சொல் " 

என்று குமுறுகிறாள். 

பாடல் 


வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என

பொருள் 

வாயி லோயே = வாயில் காப்பாளனே

வாயி லோயே  = வாயில் காப்பாளனே

அறிவறை போகிய = அறிவு அறை போக்கிய = அறிவை அறவே போக்கிய. 

இன்னொரு பொருள் சமயத்தில் அறிவை போக்கிய

பொறியறு நெஞ்சத்து = அறம் அற்ற நெஞ்சத்து (பொறி = அறம்)
 
இறைமுறை = அரச முறை 

பிழைத்தோன் = தவறியவன் 

வாயி லோயே = அப்படிப்பட்ட மன்னனின் வாயில் காப்பவனே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் = இணை + அரி + சிலம்பு + ஒன்று + ஏந்திய + கையள்  = இணையான, பரல்கள் கொண்ட ஒரு சிலம்பை கையில் ஏந்தியவள்.  

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று 

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = சொல்லுவாய் சொல்லுவாய்

இரண்டு முறை கூறுகிறாள். அரை குறையாக கேட்டு முடிவு செய்யும் மன்னனின் காவலன் தானே இவன் என்று நினைத்து இரண்டு முறை கூறினாளோ என்னவோ.

No comments:

Post a Comment