Pages

Tuesday, November 27, 2012

பிரபந்தம் - பல்லாண்டு


பிரபந்தம் - பல்லாண்டு 


இறைவனை எதற்கு வாழ்த்த வேண்டும் ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? நாம் வாழ்த்தியா அவன் வாழப் போகிறான் ? பின் ஏன் பெரியவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்துகிறார்கள் ?

நமச்சிவாய வாழ்க என்று ஆரம்பிக்கிறார் மாணிக்க வாசகர் சிவ புராணத்தில்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்கிறார் சேக்கிழார் பெரிய புராணத்தில்

எதற்கு இறைவனை வாழ்த்த வேண்டும் ?

ஒரு மணி மாலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உள்ள மணிகளை அசைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மணியாக அசைக்கலாம் அல்லது அனைத்து மணிகளின் ஊடே செல்லும் அந்த நூலை அசைக்கலாம். நூலை அசைத்தால் மாலை அசைவதைப் போல, அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடாடும் இறைவனை வாழ்த்தினால் அனைத்து உயிர்களையும் வாழ்த்தியது போலத்தான். 

இராமசாமி வாழ்க, குப்புசாமி வாழ்க, பீட்டர் வாழ்க, அக்பர் வாழ்க, மரம் வாழ்க, மீன் வாழ்க என்று சொல்லிக் கொண்டே போவதை விட , "நமச்சிவாய வாழ்க" என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி வாழ்த்துவது எளிது. 

இன்னொரு குறிப்பு. 

நமக்கு யாரவது நன்மை செய்தால் நாம் அவர்களை வாழ்த்துவோம்....நல்லா இருக்கணும்..என்று வாழ்த்துவோம்...இறைவன் நமக்கு எவ்வளவோ தந்து இருக்கிறான்...அவனை வாழ்த்துவது தானே முறை...

பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்....திருமாலே நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார். பின்னும் பார்க்கிறார்...அவன் மார்பில் வாழும் லக்ஷ்மி தெரிகிறாள்...அவளையும் வாழ்த்துகிறார்...பின்னும் பார்க்கிறார் அவன் கையில் உள்ள சங்கும் சக்கரமும் தெரிகிறது...அவற்றையும் வாழ்த்துகிறார்...சரி அவன் வாழ வேண்டும், அவன் மனைவி, அவன் சங்கு, அவனுடைய சக்கரம் எல்லாம் வாழ்தியாகிவிட்டது...அவனுக்கும் தனக்கும் உள்ள பந்தம் பிரிந்து விடக் கூடாது...அந்த பந்தமும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்....

பாடல்


 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

பொருள் 

பல்லாண்டு = பல ஆண்டுகள்

பல்லாண்டு = பல ஆண்டுகள்

பல்லாயிரத்தாண்டு = பல ஆயிரம் ஆண்டுகள்

பலகோடி நூறாயிரம் = பல கோடி, நூறு ஆயிரம் ஆண்டுகள்

மல்லாண்ட = மல்லர்களை ஆண்ட (வென்ற)

திண்தோள் = திண்மையான தோள்களை கொண்ட

மணிவண்ணா!  = மணி வண்ணா

உன் = உன்னுடைய

சேவடி = சிவந்த திருவடிகள்

செவ்வி = அழகான 

திருக் காப்பு. = காவலுடன் இருக்கட்டும்

அடியோமோடும் = அடியார்களான எங்களோடும்

நின்னோடும் = உன்னோடும்

பிரிவின்றி = எப்போதும் பிரிவின்றி

ஆயிரம் பல்லாண்டு = பல ஆயிரம் காலம் வாழ வேண்டும்

வடிவாய் = அழகாய், பொருத்தமாய்

நின் வலமார்பினில் = உன்னுடைய வலது மார்பினில்

வாழ்கின்ற = உறைகின்ற

மங்கையும் பல்லாண்டு = திருமகளும் பல்லாண்டு வாழ்க

வடிவார் = வடிவமான

சோதி = ஜோதி (ஜோதி வடிவமான)

வலத்துறையும் = உன்னிடம் உறையும்

சுடராழியும் பல்லாண்டு = சுடர் வீசும் சக்ராயுதமும் பல்லாண்டு

படையோர்புக்கு = படைகளில், யுத்தங்களில் புகுந்து

முழுங்கும் = முழங்கும்

அப்பாஞ்சசன்னியமும் = அந்த பாஞ்சசன்யம் என்ற சங்கும்

பல்லாண்டே. = பல்லாண்டு வாழ்க 

இறைவனுக்கு ஏதோ தீங்கு ஏற்பட்டு விடும் என்ற பக்தி மிகுதியால் நம்மாழ்வார் பல்லாண்டு பாடியதாக ஒரு குறிப்பு உள்ளது. 

தான் மட்டும் பல்லாண்டு பாடினால் போதாது என்று மற்றவர்களையும் அழைக்கிறார்...யாரையெல்லாம் அழைக்கிறார் என்று பார்ப்போம்....


6 comments:

  1. Superb RS.Inda Pallandu padinathu Madurai Kudal Alazhar Perumal kovilil.Avar perumalukke Mangala sasanm padiyathal Periyalvazhar endru peyar.Even today in all perumalkovil they used to sing this song after sathu Murai.Please continue.

    ReplyDelete
  2. இவ்வளவு எளிமையான பாடல். ஆனால் உன் விளக்கம் படித்த பின் எவ்வளவு புது அர்த்தங்கள் விளங்குகிறது. you are doing a great work. keep it up.

    ReplyDelete
  3. அற்புதமான விளக்கம். அதிலும் எனக்கு உன் மாலை உதாரணம் மிகவும் பிடித்தது. மிக்க நன்றி. இதைப் படித்து விட்டு, "நீ நல்லா இருக்கணும்" என்று வாழ்த்த வேண்டும்போல் இருக்கிறது!

    ReplyDelete
  4. நீர் பல்லாண்டு வாழ்க. பலகோடி நூறாயிரம் ஆண்டு நிம் தமிழ் தொண்டு வாழ்க .
    Write மலர் சிலம்படி வாழ்த்து வணங்குவோம் பாடல் (உலகெல்லாம் உணர்ந்தோர்க்கரியவன் ) .

    ReplyDelete

  5. பல்லாண்டு பாடலுக்கு அருமையான பதவுரை வழங்கினீர் நீவிர் வாழ்க பல்லாண்டு. இவ்வையகம் தமிழ் பாடல்களை நன்கறிய நீவிர் செய்யும் பணி சிறக்க இப்பூவுலகில் பல்லாண்டு வாழ்வீரே..

    மீதமுள்ள 11 பாடலுக்கு விளக்கத்தை தேடினேன் கிடைக்கவில்லை, பொதுவாக பண்டைத் தமிழ்ப் பாடலை இதுபோல் பதம்பிரித்துப் படிக்க தங்களைப் போல் உதவினால், பாமரருக்கும் தமிழ்ப் பாசுரங்கள் மேல் பற்று வரும். வாசிப்பை நேசிக்க இதுபோல் எளிதில் பொருள்விளங்கக் கூறும் ப்ளாக்குகள் இணையத்தில் வரவேற்கப்படுகிறது.. வாசகர்களால் பாராட்டப்படுகிறது.

    தொடருக உமது தமிழ்ப்பணி...
    ==========================

    தமிழே என்றும் அன்பே என்றும்
    தமிழே ஓங்கித் தழைக்கும் எனவும்
    இமியும் பிழையே இல்லா திருக்க
    அமிர்தச் சொல்லில் அழகாய் சொல்வீர்
    அனைவர் உள்ளம் அள்ளும் அழகில்
    புனையும் யாவும் புகழைத் தாங்கும்.!
    ஒருவர ஆழ்ந்தே உணர்ந்தே ஓத
    தருவீர் இன்பத் தமிழின் குரலில்.!
    விழுதைப் போல தமிழைக் காக்க
    குழுவில் ப்ளாக்கில் குன்றாய் இணைந்து
    அழகாய்ச் சொற்கள் அமுதாய்
    வழங்கும் வாசிப்பை வழுவ விடாதே.!

    நேரிசை ஆசிரியப்பா

    பெருவை பார்த்தசாரதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மீதம் உள்ள பாசுரங்களுக்கும் இது போல எளிய தமிழில் உரை எழுத ஆசை. குருவருள் சித்திக்கும் என்று நம்புகிறேன்.

      Delete