Pages

Sunday, November 4, 2012

அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார்


அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார் 


 தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் பொன், வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று உலகங்களை செய்து வைத்துக் கொண்டு எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த உலகங்களுக்கு அரண் (தடுப்புச் சுவர்) இருந்தது....நாடுகளுக்கு கோட்டைச் சுவர் இருப்பது மாதிரி. 

அந்த அரணை பெரிய விஷயம் என்று எண்ணி மனதில் அருளே இல்லாமல் எல்லோரையும் துன்புறுத்திய அரக்கர்களின் கோட்டையை அழித்த சிவனும், திருமாலும் அபிராமி இடம் சரணம் சரணம் என்று வந்தனர். அவள், அவளுடைய அடியார்களின் மரணம் பிறவி இரண்டையும் வரமால் காப்பாள். 

"அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர்"

என்ன பொருள் ?

பொருட் செல்வம் பெரிது என்று நினைக்க நினைக்க அருள் நம்மை விட்டு விலகிப் போய் விடுகிறது. பணம் சேர்க்கும் குறிக்கோள் வந்தவுடன், மற்றவர்களுக்கு உதவ நேரமும் இருப்பது இல்லை, மனமும் இருப்பது இல்லை. பொருளே நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது.  

அப்படிப் பட்ட அசுரர்கள் கடைசியில் அழிந்து போகிறார்கள். 

பிறவி என்று இருந்தால் பொருள் வேண்டும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, நமது எதிர் காலத்திற்கு என்று பொருள் கட்டாயம் வேண்டும். எவ்வளவு பொருள் இருந்தாலும் பத்தாது என்றே தோன்றுகிறது. அதை செற்பதிலேயே காலம் முழுவதும் சென்று விடுகிறது. பின் என்ன தான் இதற்க்கு வழி ?

அபிராமி ஒன்றே இதற்க்கு வழி. அவளை வணங்கினால் பிறவியே வராது. பின் எங்கிருந்து பொருள் ஆசை வரும் ? 

மரணமும் இன்றி, பிறவியும் இன்றி ஆனந்த பெறு வாழ்வு வாய்க்கும். 

பாடல்




அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் 
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, 
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், 
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

பொருள்

அரணம் = கோட்டை மதில் சுவர்

பொருள் என்று  = பெரிய விஷயம் என்று 

அருள் ஒன்று இலாத அசுரர் = கொஞ்சம் கூட அருள் இல்லாத அசுரர்கள்

தங்கள் = அவர்களுடைய

முரண் = முரண்பாடுகள். இறை அருளை விட்டு பொருள் தேடிய அவர்களின் 
முரண்பாடுகள்

அன்று அழிய = அன்று அழிந்து போக

முனிந்த = கோபப் பட்ட

பெம்மானும், = பெரியவனும்

முகுந்தனுமே,= முகுந்தன் ஆகிய திருமாலும் 

சரணம் சரணம் என = சரணம் சரணம் என்று வந்து 

நின்ற நாயகி = நின்ற நாயகி

தன் அடியார், = அவளுடைய அடியார்கள் 

மரணம் பிறவி இரண்டும் = மரணம் பிறவி இரண்டும்

எய்தார்,= அடைய மாட்டார்கள்

இந்த வையகத்தே - இந்த உலகில் 

No comments:

Post a Comment