Pages

Tuesday, November 6, 2012

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம் 


அபிராமி, இரவும் பகலும் உன் நினைவாகவே இருக்கிறது. நான் எதை எழுதினாலும், உன்னைப் பற்றியே இருக்கிறது. நான் படிப்பது எல்லாம் உன் பெயரைத்தான். உன் பாதத்தை பார்க்கும் போது என் மனத்திலும் ஈரம் கசிகிறது. உன் அடியார்களுடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன். 

இதை எல்லாம் செய்ய நான் என்ன புண்ணியம் செய்தேனோ. இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். 

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்.

இந்த பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை என்கிறார் பட்டர். அவருக்கே அப்படிஎன்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

அவருடைய மனம் கல் போல கடினமாக இருக்கிறதாம். பக்தி ஏறும் போது, அந்த கல்லும் லேசாக விரிசல் விட்டு, அதன் வழியே அன்பும் கருணையும் கசிந்து வெளி வருகிறதாம். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?

பாடல்:


கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி 
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே


கண்ணியது = பாடியது
உன் புகழ் = உன் புகழை
கற்பது = கற்றது அல்ல, கற்பது (நிகழ் காலம்)
உன் நாமம் = உன்னுடைய திரு நாமம்
கசிந்து = மனம் கசிந்து
பக்தி பண்ணியது = பக்தி செலுத்தியது
உன் இரு = உன்னுடைய இரண்டு
பாதாம்புயத்தில் = பாத கமலங்களில் (பாதம் + அம்புயம்)
பகல் இரவா = இரவு பகலாக
நண்ணியது = அருகில் இருந்தது 
உன்னை நயந்தோர் = உன் பக்தர்களிடம்
அவையத்து = இந்த உலகில்
நான் முன் செய்த = நான் முன்பு செய்த
புண்ணியம் ஏது = புண்ணியம் தான் என்ன
என் அம்மே = என் தாயே
புவி ஏழையும் = ஏழு உலகங்களையும்
பூத்தவளே = மலரச் செய்தவளே

1 comment:

  1. இதைப் படிக்கும்போது, கமலஹாசனின் "குணா" படம் நினைவுக்கு வருகிறது. "அபிராமி அந்தாதி"யைப் படித்துவிட்டுத்தானோ அபிராமி என்று கதாநாயகிக்குப் பெயர் வைத்தனர்?

    ReplyDelete