இராமாயணம் - தாயினும் நல்லான் - ஏன் ?
இராமனை பார்க்க கானகத்திற்கு அவனுடைய தாய்மார்கள் வந்தார்கள், பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள், அமைச்சர்கள் வந்தார்கள்....ஆனால் யாரும் இராமன் காட்டில் சாப்பாடுக்கு என்ன பண்ணுவான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. கொண்டு வந்ததாக கம்பன் எங்கும் கூறவில்லை. அவர்களுக்கு எப்படியாவது இராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவன் நேரத்திற்கு சாப்பிட்டானா என்ற கவலை இருக்க வில்லை.
குகன் ஒருவன் தான், இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான்.
குழந்தையின் பசி அறிந்து உணவு ஊட்டும் தாய் போல, இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான்.....
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்க வாசகர் இறைவனைக் கூறினார்.
தாயை விட நம்மேல் அன்பு கொண்டவன் இறைவன் என்பது மணிவாசகர் வாக்கு.
தாயை விட நல்லவன் என்று குகனை இறைவனின் அளவுக்கு உயர்த்துகிறார் கம்பர்.
பாடல்
இருத்தி ஈண்டு’ என்னலோடும்
இருந்திலன்; எல்லை நீத்த
அருந்தியன், ‘தேனும் மீனும்
அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
திருஉளம்?’ என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
விளம்பலுற்றான்;
பொருள்
இருத்தி ஈண்டு = என் பக்கத்தில் இரு
என்னலோடும் = என்று இராமன் சொன்ன போதும்
இருந்திலன் = (குகன் இராமனின் பக்கத்தில்) அமரவில்லை (மரியாதை, பண்பாடு)
எல்லை நீத்த = எல்லை இல்லாத, அளவு கடந்த
அருந்தியன் = அன்பு கொண்டவன்
தேனும் மீனும் = தேனையும் மீனையும்
அமுதினுக்கு = உண்பதற்காக
அமைவது ஆகத் = சரியாக இருக்கும் என்று
திருத்தினென் = திருத்தி
கொணர்ந்தேன்;= கொண்டு வந்தேன்
என்கொல் திருஉளம்? = நீ என்ன நினைக்கிறாய்
என்ன = என்று அவன் சொன்னவுடன்
வீரன் = வீரனான இராமன்
விருத்த மாதவரை = அங்கிருந்த பெரிய தவ சீலர்களை
நோக்கி முறுவலன் = நோக்கி புன்முறுவல் செய்து
விளம்பலுற்றான் = சொல்ல ஆரம்பித்தான்
இந்த பாடலில் கொட்டி கிடக்கும் அர்த்தத்தை ஒரு ப்ளாக்-இல் சொல்லி முடியாது...
எனவே
தொடரும் என்றால் கோவித்து கொள்ள மாட்டீர்கள் தானே ...
குகனைப்பற்றிய அருமையான விஷயங்கள் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் காத்திருப்பது சுகமாகிவிட்டது .
ReplyDeleteஅற்புதம். குகன், ராமபிரானுக்கு முன்னமேயே அறிமுகம். அயோத்திக்கே ராமனை சென்று பார்ப்பானாம். அப்போதைய பழக்கம் தேனும் மீனும் கொண்டு தருவது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படி இருந்தால் இலக்குவனின் நீண்ட அறிமுகம் தேவையில்லை என்று வரும். எது சரியான கருத்து என்று தெரியவில்லை.
ReplyDeleteகுகனுக்கு இராமன் மேல் இவ்வளவு அன்பு வரக் காரணம் என்ன? ஒன்று குகனுக்கு இராமனை நேரடியாகத் தெரிந்து இருக்கலாம் (அன்பர் TRR மேலே சொல்வது போல). அல்லது, இராமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது, குகனின் நல்ல உள்ளத்தின் காரணமாக அவன் எல்லோரையுமே இப்படி நேசிக்கலாம். கம்பர் இதைப் பற்றி எதாவது சொல்கிறாரா?
ReplyDeleteமுன்னே பின்னே தெரியாதவர் மேல் அன்பு இருப்பது ஆச்சரியமே.
இதில் என்ன ஆச்சர்யம். கண்டவுடன் காதல் என்பது தான் வழக்கம்.
DeleteWho ever loved that loved not at first sight?
என்று ஷேக்ஸ்பியர் சொன்ன மாதிரி.
இராமனும் சீதையும் பார்த்த உடன் காதல் கொண்டார்கள்.
இராமன் அனுமனை பார்த்தவுடன் "இவன் உலகுக்கு அச்சாணி" என்றான். முன்ன பின்ன பழக்கம் கிடையாது.
குகன் இராமனை இதற்கு முன்னால் பார்த்தது இல்லை என்பதை பின்னொரு ப்ளாக் இல் எழுதுகிறேன்
அன்பு வருவதற்கு, அதுவும் இது போன்ற தெய்வீக சந்திப்புகளில் முன்பின் அறிமுகம் என்பது அவசியமில்லை என்பது இதிகாசங்களிலும் புராணங்களிலும் அநேக இடங்களில் தெரிகிறது. ஸ்ரீ.ரிதின் அனுமனைப் பற்றி குறிப்பிட்டது மிக உயர்ந்த சந்திப்பு. அது அனுமனுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் தான். வால்மீகி இதனை அற்புதமாக கூறுவார். அனுமனை யாரென்றே தெரியாது. ராமனிடம் வந்து முதல் முறையாக நான் இன்னார், தாங்கள் யார் என்று கேட்ட வார்த்தைகளிலிருந்து , அனுமனின் அனைத்து குணாதிசயங்களையும் ராமன் இலக்குவனிடம் பொழிகிறார்.
ReplyDeleteபொருத்தமான வார்த்தைகளை கையாள்வதைப் பார்த்தால் யஜூர் வேதத்திலும், சுருக்கமாகப் பேசுவதிலிருந்து ரிக் வேதத்திலும், இனிமையாகப் பேசுவதிலிருந்து சாம வேதத்திலும் மகா பண்டிதனாக இருக்க வேண்டும். பிழையின்றி, என்ன பேச வேண்டுமோ அதைப் பேசுவதிலிருந்து ஒன்பது இலக்கணங்களிலும் பண்டிதனாக இருக்க வேண்டும் என்று ராமன் இலக்குவனிடம் கூறுகிறார்.
The inputs from everyone is very informative and interesting.. Who said" too many cooks spoil the broth"? In this forum it proves to be different. Hope many join us.
ReplyDeleteSuper
ReplyDelete