Pages

Sunday, December 23, 2012

தேவாரம் - வாராத செல்வம்


தேவாரம் - வாராத செல்வம்


எப்போதும் அவனைப் பிரியாத அடியார்களுக்கு அவன் "வாராத செல்வம்" அருளுவான். 

அது என்ன வாராத செல்வம் ?

மீண்டும் இங்கு வந்து பிறந்து வராமல் இருக்கும் செல்வம். 

இன்னொரு பொருள் 

இங்கு வாராத செல்வம். அங்கு போனால் கிடைக்கும். அங்கு போவதுதான் அந்த செல்வம். அதாவது வீடு பேறு. அதை, அவன், அடியார்களுக்கு வருவித்து தருவான். 

பாடல் 


பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
    மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

பொருள்


பேரா யிரம் = பேர் ஆயிரம். 

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்பார் மணிவாசகர். ஒரு பெயரும் இல்லாதவனுக்கு ஆயிரம் நாமம். 

பரவி = பாடி, துதித்து
 
வானோ ரேத்தும் = வானோர் ஏத்தும், வானோர் புகழும்

பெம்மானைப் = பெரியவனை

பிரிவிலா அடியார்க்கு = எப்போதும் பிரியாத அடியவர்களுக்கு


என்றும் = எப்போதும் 


வாராத செல்வம் = மீண்டும் இங்கு பிறந்து வராத செல்வம். "இன்னுமோர் கருப்பையூர் வாராமர்க் கா" என்று உருகுவார் பட்டினத்தார்

 வருவிப் பானை = வருவித்து தருவானை

மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் = மந்திரம், தந்திரம், மருந்தும் மூன்றுமாகி. மந்திரம் என்பது அவன் திருநாமம். தந்திரம் அதை எடுத்துச் சொல்லும் வேதம், புராணம், போன்ற நூல்கள். மருந்து அதை செய்யும் பூஜை, வழிப்பாடு, போன்ற முறைகளும். அவனே மந்திரமும், தந்திரமும் மற்றும் மருந்துமாகி இருக்கிறான். 

மருந்து எதற்கு வேண்டும் ? நோய்க்கு மருந்து வேண்டும்.


தீராநோய் = தீராத நோய் எது ? பிறவி நோய் தான். என்ன செய்தாலும் தீருகிறதா ? மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. 

தீர்த்தருள வல்லான் தன்னைத் = அந்த தீராத பிறவி நோயையும் தீர்த்து அருள வல்லான் தன்னை

திரிபுரங்கள் = அரக்கர்கள் செய்த மூன்று உலகங்களையும்

தீயெழ = தீ எழ

திண் சிலை = வலிமையான வில்லைக்

கொலைமலி எய்துவித்த கொடியோனிலங்கை
பொடியாக,  வென்றியமருள்
சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்
திருமால் நமக்கு ஓரரணே....

என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம் 

கைக் கொண்ட = கையில் கொண்ட 

போரானைப் = போரளியையை

 புள்ளிருக்கு வேளூ ரானைப் = புள்ளூர் என்ற இடத்தில் இருப்பவனை  (வைதீஸ்வரன் கோயில்)

போற்றாதே = அவனைப் போற்றாதே

ஆற்றநாள் போக்கி னேனே = இத்தனை நாள் வீணே போக்கினேனே 

No comments:

Post a Comment