பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்
இறைவனிடம் என்ன வேண்டலாம் ? நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் என்று இப்படி எதையாவது கேட்கலாம்.
இதை எல்லாம் விட்டு விட்டு காரைக்கால் அம்மையார் வேறு என்னனமோ கேட்கிறார்....
இறவாத அன்பு வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும், எல்லா நேரத்திலும் இறவாத அன்பு வேண்டுமாம். உயிர் உள்ளது வளர்ந்து கொண்டே இருக்கும். இறந்தது வளராது. இறவாத அன்பு நாளும் வளரும்.
அதற்க்கு அடுத்து பிறவாமை வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் அது நல்ல வினை தானே. அதன் காரணமாக ஒரு வேளை பிறவி வந்து விட்டால் ?
அப்படி பிறந்து விட்டால், இறைவன் திருவடி மறவாமை வேண்டுமாம்...
திருவடியையை மறவாமல் இருந்தால் மட்டும் போதாது, அந்த திருவடியின் கீழ் என்றும் இருக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினாராம்.
அவர் அப்படி வேண்டியதாக சேக்கிழார் பெருமான் சொல்கிறார், பெரிய புராணத்தில், பன்னிரண்டாம் திருமுறை.
பாடல்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
பொருள்
இறவாத இன்ப அன்பு வேண்டிப் = இறவாத இன்பம் தரும் அன்பு வேண்டினார். சில அன்பு துன்பமும் தரும். வரையறைகளுக்கு உட்பட்ட அன்பு துன்பம் தரும். என் தேசத்தின் மேல் வைத்த அன்பு, அடுத்த நாட்டுக்காரனை கொல்லவும் செய்யும். என் மதத்தின் மேல் வைத்த அன்பு பிற மதத்தவர்களை அழிக்கவும் சொல்லும். எல்லை எல்லாத அன்பு , இன்பத்தைத் தரும். அப்படிப்பட்ட இறவாத, நாளும் நாளும் வளரும் இன்ப அன்பை வேண்டினார்.
பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுவார்
பிறவாமை வேண்டும் = மீண்டும் இங்கு வந்து பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்புண்டேல் = (வினை காரணமாக) மீண்டும் பிறக்க நேர்ந்தால்
உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறவாமை வேண்டும்
இன்னும் வேண்டும் = இன்னும் வேண்டும்
நான் = நான்
மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போது = நீ மகிழ்ந்து பாடி ஆடும் போது
அடியின்கீழ் இருக்க என்றார்.= உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வேண்டினார்
No comments:
Post a Comment