இராமாயணம் - கானும் கடலும் கடந்து போய்
இந்த உலகம், இதில் உள்ள பொருள்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன ?
ஏதோ ஒன்றிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படி என்றால் எல்லாவற்றிற்குள்ளும் அந்த ஏதோ ஒன்று தான் இருக்க வேண்டும் இல்லையா?
அது தானே மூலப் பொருள் ?
சரி எல்லாவற்றிக்குள்ளும் அது இருக்கிறது, ஒத்துகொள்ள கூடிய விஷயம் தான்.
எல்லா பொருள்களுக்கும் வெளியே என்ன இருக்கிறது ?
வெளியே இருப்பதும் ஒரு பொருள் தானே ?
அந்தப் பொருளும் அந்த மூலப் பொருளில் இருந்து தானே வந்து இருக்க வேண்டும் ?
அப்படிப் பார்த்தால் நாம் காணும் அனைத்துப் பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ?
அது எப்படி ஏதோ ஒன்று அனைத்துப் பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ?
அது அப்படியே இருக்கட்டும்.
இந்த பொருள்களில் இருந்து உயிர்கள் பிறந்தன.
அப்படிஎன்றால் இந்த உயிர்களுக்குள்ளும் அந்த மூலப் பொருள் தானே இருக்க வேண்டும் ?
உயிர்கள் தோன்றியபின் அவற்றிற்கு உணர்வு தோன்றியது...நல்லது, கெட்டது, அன்பு, பாசம், காதல், பக்தி என்ற உணர்வுகள் தோன்றின...உடலும், உயிரும், உணர்வுமாய் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ? சந்தேகமில்லையே ? இதில் ஒரு குழப்பமும் இல்லையே ?
அனாதியான அந்த மூலப் பொருள் அல்லது சக்தி எது ? அதை நாம் அறிய முடியுமா ? அதை நீங்கள் பொருள் என்று சொல்லுங்கள், சக்தி என்று சொல்லுங்கள், ஆண் என்று சொல்லுங்கள், பெண் என்று சொல்லுங்கள்...எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
கம்பர் அதை ஆணாக வைத்து கொள்கிறார்....அவன், கூனியும், சிறிய தாயும், அவனுக்கு கொடுமை இழைக்க, அதனால் அவன் தன் செங்கோல் துறந்து காட்டையும், கடலையும் கடந்து போய், இமைக்காத தேவர்களின் துன்பம் தீர்த்த வீரக் கழல் அணிந்த வேந்தன் (இராமன்)....
அந்த ஆதி மூலம் இராமனாக அவதரித்தது....
பாடல்
வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.
பொருள்
வான்நின்று = வானத்தில் இருந்து
இழிந்து = இறங்கி வந்த (அருவி இழிந்தது)
வரம்பு = எல்லை
இகந்த = இகந்த என்ற இந்த சொல் சுவாரசியமானது. வரம்பு இகந்த என்றால் எல்லை எல்லாத என்று பொருள் சொல்லி விடலாம். இகந்த என்ற சொல்லுக்கு பல பொருள் உள்ளது ....To jump, leap over, go beyond, transgress, overflow,.... இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து குதித்து வந்தது....quantum leap என்று சொல்வார்களே அது மாதிரி
மா பூதத்தின் = ஐம்பெரும் பூதங்களால்
வைப்பு எங்கும் = ஆன இடம் எங்கும்.
ஊனும் = உடலும்
உயிரும் = உயிரும்
உணர்வும்போல் = அதில் தோன்றும் உணர்வும் போல
உள்ளும் = அவற்றின் உள்ளேயும்
புறத்தும் = அவற்றின் வெளியேயும்
உளன் என்ப = இருக்கிறான் என்று சொல்வார்கள். அவன் யார் தெரியுமா ?
கூனும் = கூனியும்
சிறிய கோத்தாயும் = சிறிய தாயும்
கொடுமை இழப்ப = கொடுமை செய்ததால்
கோல் துறந்து = செங்கோல் துறந்து
கானும் = காட்டையும் (ஆரண்ய)
கடலும் = கடலையும்
கடந்து = தாண்டிப் போய்
இமையோர் = கண் இமைக்காத தேவர்களின்
இடுக்கண் = துன்பம்
தீர்த்த கழல் வேந்தன் = தீர்த்த வீரக் கழலை உடைய வேந்தன், அரசன்.
அதாவது, உள்ளும் புறமும் இருப்பவன் இராமன் என்கிறாரா?
ReplyDelete