இராமாயணம் - இராமனுக்கு முடியும், கோசலையின் துயரும்
மகன் உள்ள எந்த பெண்ணிடமும் கேட்டுப் பாருங்கள்....உனக்கு கணவன் பிடிக்குமா, மகன் பிடிக்குமா என்று.
என்ன சொல்லுவாள் ? இருவரையும் பிடிக்கும் என்பாள்.
யார் ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால், மௌனம் தான் பதிலாக இருக்கும்.
சரி, அடுத்த கேள்வி, கணவனுக்கு ஒரு இழப்பு ஏற்பட்டால், மகனுக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் என்ன பதில் வரும் ?
மகனுக்கு நன்மை என்றால் மகிழ்ச்சிதான் ...ஆனால் கணவனுக்கு ஒரு இழப்பு என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தவிப்பாள்.
அதை அப்புறம் பார்ப்போம்.....
கடல் பார்த்து இருக்குறீர்களா ? எவ்வளவு தண்ணி. எப்படி அவ்வளவு தண்ணியும் ஒரே அளவில் எப்போதும் இருக்கிறது ? இவ்வளவு தண்ணீர் கொண்ட கடல் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு இந்த நிலத்தை மூழ்க அடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ? எது அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ?
நமது புராணங்களில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு நம்பிக்கை.
கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று இருக்கிறது. கடல் நீரின் அளவு அதிகமாகும் போது வடவை கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும். ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை.
அது அப்படியே இருக்கட்டும்.
கதைக்கு வருவோம்.
இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும் ஒரு சின்ன துன்பம் என்றேன். அதில் அவளுக்கு என்ன துன்பம் இருக்கும் ?
இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.
இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம்.
உடனே நினைத்துப் பார்க்கிறாள், இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே என்று நினைக்கிறாள். அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி வற்றிப் போய் விட்டது.
இராமனுக்கு முடி - மகிழ்ச்சிக் கடல்
தசரதன் முடி துறத்தல் - மகிழ்சிக் கடலை வற்றவைக்கும் வடவைக் கனல்.
எவ்வளவு நுணுக்கமாக கம்பன் யோசித்து எழுதி இருக்கிறான்....
பாடல்
சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்
பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் -
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.
பொருள்
சிறக்கும் = சிறப்பினை தரும்
செல்வம் = செல்வம் (இங்கு நாடு என்று கொள்ளலாம். செல்வம் என்று கம்பன் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது)
மகற்கு = மகனுக்கு (இராமனுக்கு)
என = என்று
சிந்தையில் = சிந்தனையில், மனதில், கற்பனையில்
பிறக்கும் பேர் உவகைக் கடல் = தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்
பெட்பு அற = பெருமை இன்றி போக
வறக்கும் = வரள வைக்கும்
மா = பெரிய
வடவைக் கனல் ஆனதால் = வடவைக் கனல் ஆனதால்...எது வடவை கனல் ஆனது ?
துறக்கும் = துறக்கும், இழக்கும்
மன்னவன் = தசரதன்
என்னும் துணுக்கமே.= என்ற அச்சமானது
துறக்கும் என்று சொன்ன கம்பன் எதை துறக்கும் என்று சொல்லவில்லை. வேண்டுமானால் நாம் முடி துறக்கப் போகிறான் என்று வைத்துக் கொள்ளலாம். ஆழ்ந்து சிந்தித்தால் இன்னும் கூட பொருள் வரும்.
நிறைய வீடுகளில், ஒரு பெரிய பதவியில் இருந்த வீட்டின் தலைவன், வயதாகி ஓய்வு பெரும் பொழுது, சில சமயம் மாரடைப்பு வந்து இறந்து போனதாய் கேள்விப் பட்டிருக்கிறோம். "இனிமேல் நம் துணை தேவை இல்லையா, நான் ஒன்றுக்கும் உதவாமல் வீட்டில் சும்மா இருக்கப் போகிறேனா " என்ற எண்ணத்திலேயே மாரடைப்பு வந்து இறந்து போனவர்கள் பலர்.
தசரதன் இறக்கப் போகிறான் என்பதை அவளின் உள்ளுணர்வு சுட்டிக் காட்டியதோ ? கணவன் வெளியூர் போய் இருப்பான். அவனுக்கு அங்கே உடல் நிலை சரி இல்லை என்றால், இங்கே மனைவிக்கு ஏதோ பட படப்பாய் இருக்கும். பசி இருக்காது. அங்கும் இங்கும் பொறுமை இன்றி அலைந்து கொண்டு இருப்பார்கள். அது பெண்மையின் உள்ளுணர்வு.
எவ்வளவு நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கிறான் கம்பன்.
Is there any other poet like kamban to touch all those minute feelings and bring it out in such beautiful poems.
ReplyDeleteஇருக்கலாம். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை படித்தால்தான் தெரியும். நான் இன்னும் தமிழையே சரியாய் படிக்கவில்லை.
DeleteFantastic.
ReplyDeleteமிக அருமையாக கௌசல்யாவின் மன நிலைமையை படம் பிடிதுக்காட்டிருக்கும் கம்பனை புகழ்வதா, இல்லை அதை நாங்கள் அனுபவிக்குமாறு எழுதியுள்ள உங்களுக்கு நன்றி கூறுவதா தெரியவில்லை.
எல்லாப்பாடலிலும் SUSPENSE இருக்க வேண்டுமா என்ன ?நாட்டை கம்பன் செல்வம் என்பதற்குஎன்ன கரணம் ?
அருமையான பாடல். அருமையான உரை. நன்றி.
ReplyDelete