Pages

Friday, December 7, 2012

கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல்


கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல் 


நாம் மற்றவர்களுக்கு ஒரு கெடுதலை காலையில் செய்தால், நமக்கு ஒரு கெடுதல் மாலையில் தானே வரும் என்கிறார் வள்ளுவர். 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 
இன்னா = கெடுதல்
முற்பகல் = காலையில்
செய்யின் = (நாம் வலிய சென்று) செய்தால்
தமக்கு = நமக்கு 
இன்னா = கெடுதல்
பிற்பகல் = மாலையில் 
தாமே வரும் = யாரும் செய்யாவிட்டாலும், தானாகவே வந்து சேரும். 

கெடுதல் செய்தால் கெடுதல் வரும், சரி. 

நல்லது செய்தால், நல்லது வருமா ? ஏன் வள்ளுவர் கெடுதலை மட்டும் சொல்கிறார் ? நல்லது செய்தால் நல்லது வரும் என்றும் சொல்லி இருந்தால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம் அல்லவா ? சொல்லாமல் விட்டு விட்டார். திருக்குறளை படிப்பவன் என்ன நினைப்பான். கெட்டது செய்தால் கெட்டது வரும். சரி கெட்டது செய்ய வேண்டாம். நன்மை செய்தால் நன்மை வருமா என்று தெரியவில்லை. எதுக்கு கஷ்டப் பட்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் ஒன்றும் செய்யாமல் இருந்து விடலாம் அல்லவா ? 

பார்த்தாள் அவ்வை, இது சரிப் படாது. நன்மைக்கு நன்மை விளையும் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். 

அப்படி சொல்லாவிட்டால் நாட்டில் ஒருத்தனும் நல்லது செய்யமாட்டான் என்று நினைத்தாள் .

ஏற்கனவே ஏழு வார்த்தைகள் ஆகி விட்டது. இதை சேர்க்கவும் வேண்டும், மொத்த வார்த்தகைளை குறைத்து நாலே நாலு வார்த்தையில் சொல்லவும் வேண்டும்...எப்படி ?

சொல்கிறாள் பாருங்கள்....

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கணித சமன்பாடு போல் எழுதி விடலாம்

அவ்வளவு தான். 

நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு வந்து சேரும். அதுவும் உடனுக்குடன். 

செய்யின் என்றால் செயல்பாடு என்று பொருள். முனைந்து செய்ய வேண்டும்.

விளைதல் தானாக நிகழும். விதை போட்டு விட்டால் போதும். 

எந்த விதை போடுகிறோமோ, அந்த செடி விளையும். 

எவ்வளவு வார்த்தையில் நுட்பம்.... 

விதை ஒன்று போடுகிறோம். ஒரே ஒரு விதை மட்டுமா விளைந்து வருகிறது ? ஒரு ஆல  மர  விதையில் இருந்து ஒரு பெரிய ஆல  மரமே வருகிறது...கிளை, இல்லை, காய், கனி, அந்த கனியில்  ஆயிரம் ஆயிரம் விதைகள் வருகின்றன...எனவே நாம் நன்மை செய்தால் நன்மை ஒன்றுக்கு பத்தாக விளையும். தீமைக்கும் அதுவே விதி.


2 comments: