இராமாயணம் - தையல் கடலும், தைலக் கடலும்
தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்...என்ன செய்ய விதி...சாகும் போது பிள்ளைகள் பக்கத்தில் இல்லை.
பரதனும் சத்ருக்கனனும் வரும் வரை தசரதனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும். அவன் உடலை தைலத்தில் போட்டு வைத்தார்கள்...கோசலை, கைகேயி, சுமித்தரை என்ற பட்டத்து இராணிகளோடு அவனுக்கு பதினாயிரம் மனைவிகள்...தையல் (பெண்கள் ) என்னும் கடலில் கிடந்தவனை தைலக் கடலில் இட்டு வைத்தார்கள்.
கம்பனின் சொல் விளையாட்டு....
பாடல்
செய்யக் கடவ செயற்குரிய சிறுவர், ஈண்டை யார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாது' என்ன, இயல்பு எண்ணா,
'மையற் கொடியான் மகன், ஈண்டு வந்தால் முடித்தும் மற்று' என்னத்
தையற் கடல்நின்று எடுத்து, அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான்.
பொருள்
செய்யக் கடவ = செய்ய வேண்டிய கடமைகளை
செயற்குரிய = செய்வதற்குரிய
சிறுவர் = பரதனும் சத்ருக்கனனும்
ஈண்டை யார் அல்லர் = இங்கு (அயோத்தில்) உள்ளவர்கள் அல்ல
எய்தக் கடவ பொருள் = வரவேண்டிய பொருள்
எய்தாது இகவாது = வரமால் போகாது
என்ன = என்று
இயல்பு எண்ணா,= உலகத்தின் இயல்பை எண்ணி (அல்லது விதியின் இயல்பை எண்ணி)
மையற் கொடியான் மகன் = மையல் தரக் கூடியவளும், கொடியவலும் ஆன, கைகேயின் மகன்
ஈண்டு வந்தால் = இங்கு வந்தால்
முடித்தும் மற்று = காரியங்களை முடிக்கலாம்
என்னத் = என்று நினைத்து
தையற் கடல்நின்று எடுத்து = தையல் (பெண்கள்) என்னும் கடலில் இருந்து அவனை எடுத்து
தயிலக் கடலின்தலை உய்த்தான் = தைலக் கடலில் அவனை இட்டு வைத்தார்கள்.
நல்ல பாடல். நமக்கு எல்லாருக்குமே இதுதானே விதி?!
ReplyDeleteதைலக் கடல் நமக்கு விதி...தையல் கடல் ?...:)
ReplyDelete