Pages

Sunday, January 13, 2013

இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம்


இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம் 


நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!



நயம் தரும் பேரின்பம் எல்லாம் பழுது என்று - பேரின்பம் எப்படி பழுது ஆகும் ?

நிறைய வியாக்கியானங்கள் எழுதப்பட்டு உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம். 

1. பெரியவர்கள் தீயவை, தீமை, சிற்றின்பம் போன்றவற்றை நேரடியாகச் சொல்வது இல்லை. தீய நெறியை 

நெறி அல்லாத நெறி தன்னை 
நெறியாகக் கொள்வேனே 
சிறு நெறிகள் சேராமே 
பெறு நெறியே சேரும் வண்ணம் 
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு யார் தருவார் அச்சோவே என்று பாடுகிறார் மணிவாசகர்.

தீ நெறி என்று சொல்லவில்லை....நெறி அல்லாத நெறி என்று குறிப்பிடுகிறார். 

கொடிய நஞ்சு உள்ள பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம் அல்லவா "? அது போல் இங்கே மங்கலமாக புலன் இன்பத்தை பேரின்பம் என்று குறிப்பிட்டார்.

2. பேரின்பம் என்றால் முக்தி, வீடு பேறு, சொர்க்கம் என்று சொல்லலாம். இறைவன் அடியாருக்கு அது எல்லாம் பழுது தான். அவர்களுக்கு மிகுந்த விருப்பம் உள்ளது அவன் அழகில் தோய்வதுதான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே 

என்று சொர்கமும், முக்தியும், இந்திர லோகமும் வேண்டாம் என்று அவனை கண்டு கழிப்பதிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்து விடுகிறது. 

3. பேரின்பம் அடைய வேதங்களும் சாஸ்திரங்களும் ஞான, கர்ம, பக்தி மார்கங்களை காட்டுகின்றன. வைணவ அடியார்கள் அதை எல்லாம் பழுது என்று விட்டுட்டு ஆச்சாரியன் திருவடிகளே சரணம் என்று இருந்து விடுவார்கள். 

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை....

3 comments:

  1. அருமையான விளக்கம். படிக்கப் படிக்க பேருவகை பிறக்கிறது.
    -சேஷகிரி

    ReplyDelete
  2. Thanks for the excellent vilakkam.ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை-மிக அருமையான வரிகள்.

    ReplyDelete
  3. கொஞ்சம் சிக்கலான ஒரு வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்களா?! அருமை.

    ReplyDelete