Pages

Thursday, January 17, 2013

கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று


கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று 


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.


அருணகிரி நாதர் பாடல் என்றால் பதம் பிரிக்காமல் படித்து அறிய முடியாது. 

சீர் பிரித்த பின் 

குறியை குறியாது குறித்து அறியும் 
நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று உலகோடு உரை சிந்தையும் அற்று 
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 

பொருள் 

இறைவன் என்பவன் எங்கு இருப்பான் ? அவன் ஏதோ ஒரு இடத்தில் இருப்பானா ? அவன் இருக்கும் இடத்தின் விலாசம் இருந்தால் ஒரு நடை போய் பார்த்து விட்டு வரலாம். அப்படி ஒரு இடம் இருக்கும் என்று ஆன்மீக அன்பர்கள் கூட நினைக்க மாட்டார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். குறிப்பாக ஒரு இடத்தில் இருக்க மாட்டான். 

சரி, இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க மாட்டான், ஆளாவது எப்படி இருப்பான்னு சொன்னா நாங்களே போய் தேடி கண்டு பிடிசிக்கிறோம் என்றால் அதுவும் முடியாது. அவனுக்கு ஆறு தலை, பன்னிரண்டு கை, ஆறு அடி உயரம், மா நிறம் அப்படின்னு ஒண்ணும் சொல்ல முடியாது. 

ஆள் அடையாளமும் இல்லை, இருக்கிற இடமும் இல்லை...பின் எப்படி தான் அவனை அறிந்து கொள்வது ? 

குறிப்பா இப்படித்தான் இருப்பான், இங்கே தான் இருப்பான் என்று இல்லாமல் உருவமும், அருவமும் இல்லாத அவனை எங்கும் காண்பது தான் மெய் ஞானம். 

குறியை குறியாது குறித்து அறியும்

இப்படி எந்த குறிப்பும் கூற முடியாத அவனை குறித்து அறியும் அறிவு...மெய் அறிவு 

குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு ஆர் தருவார் அச்சோவே என்பார் மணி வாசகர் 

அது சரி, அப்படி பட்ட இறைவனை எப்படி தான் அறிவது ? அதற்க்கு என்ன வழி ? என்ன நெறி ? என்று கேட்டால் 

அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், குரு, ஆச்சாரியர் என்று அவர்கள் சொல்லும் வழியில் செல்வது தான் சிறந்த நெறி. 

நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்

அப்படி நாம் ஒரு நெறியில் நடப்பதற்கும் அவன் அருள் வேண்டும். 

அடுத்த வரி 

செறிவு அற்று 

செறிவு என்றால் அடர்த்தி, மிகுதியாக உள்ளது என்று பொருள்  

எது செறிந்தது ? நாம் என்ற ஒன்று செறிந்தது.

எப்படி ?

உடல் உருவாகிறது. அதோடு கூட உயிர் வருகிறது. கொஞ்சம் வளரும்போது மனம் வருகிறது. நான் என்ற எண்ணம் உருவாகிறது. அந்த நான் நாள் தோறும் வளர்ந்து கொண்டே போகிறது. பிடித்தது, பிடிக்காதது, நல்லது, கேட்டது, வேண்டியது, வேண்டாதது, ஆசை, காமம், கோபம், பொறாமை, என்று செறிவு ஏறிக் கொண்டே போகிறது. 

நண்பர்கள், நாம் படிக்கும் புத்தகம், உறவினர்கள், சினிமா, தொலைக் காட்சி, செய்தித் தாள்கள் என்று இவைகள் ஒரு பக்கம் நமக்கு செறிவை ஏற்றுகின்றன. 

இவற்றை எல்லாம் தவிர்த்து, உண்மையான நாம் யார் என்று அறிவது மிக மிக கடினம். இந்த சிக்கலில் இருந்து விடு படுவதுதான் 

செறிவு அற்று 

அடுத்தது 

உலகோடு உரை சிந்தையும் அற்று

நான் யார், எங்கே இருக்கிறேன், நம்மோடு இருக்கும் இவர்கள் எல்லாம் யார், எங்கிருந்து வந்தார்கள், எங்கு போகிறார்கள், இவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன ? இந்த உறவு நிரந்தரமானதா ? 

இவை எதுவும் நிரந்தரம் அல்ல...

நமக்கும் இந்த உலகுக்கும் உள்ள சிந்தனை அற்றுப் போக வேண்டும்.....

அடுத்த வரி 

அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 


அறிவு அற்று போவது நம்மால் புரிந்து கொள்ள முடியும். அறியாமையும் அற்று போவது என்றால் என்ன ?

எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதற்க்கு ஆயிரக் கணக்கான குணங்கள் இருக்கும். அதில் சிலவற்றை நாம் அறிந்து கொண்டு, நாம் அதைப் பற்றி அறிந்து கொண்டதாக சொல்லித் திரிகிறோம். எந்த ஒரு பொருளை பற்றியும் நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்க உலகில் ஆயிரக்கணக்கில் பொருள்கள் இருக்கின்றன. பொருள்களை தவிர்த்து எத்தனை வித மனிதர்கள், எத்தனை தத்துவங்கள்....இத்தனையும் அறிவது எப்போது...

கற்பனவும் இனி அமையும் என்றார் மணி வாசகர்

நாம் எத்தனை முயன்றாலும், நாம் அறிந்து கொள்வது என்னவோ கடலின் ஒரு துளி தான். இதை உணரும் போது நாம் அறிந்த அறிவு ஒன்றும் பெரிய விஷயம் என்று எண்ணம் வரும். இது ஒன்றும் இல்லை என்பது புலனாகும். ஒன்றும் இல்லாத ஒன்றோடு என்ன தொடர்பு. அந்த உறவு, தொடர்பு அற்றுப் போய் விட்டது. 

அறிய வேண்டும் என்ற எண்ணமும் அற்றுப் போய் விட்டது. தெரிந்தது எது , தெரியாதது எது என்ற அறியாமையும் அற்றுப் போய் விட்டது. 

இது ஒரு பாடல். இப்படி நூறு பாடல். 




2 comments:

  1. இந்த மாதிரிப் பாட்டு ஒன்று எழுதுவதற்கே எதோ அமானுஷ்யமான மூளை இருந்திருக்க வேண்டும். நூறு பாடல் எழுத வேண்டுமென்றால்?!?!?

    அது சரி, குறியே இல்லாத இறைவனை ஏன் முருகன் என்றெல்லாம் சொல்லி அருணகிரியே வழிபட்டார்?

    ReplyDelete
  2. கடைசி ரெண்டு வரி சும்மா தூளோ தூள்!

    ReplyDelete