Pages

Monday, January 21, 2013

இராமாயணம் - உயிரின் ருசி


இராமாயணம் - உயிரின் ருசி 


இராவணன் ஆட்சிக்கு வந்தபின், அரக்கர்களின் உயிரை குடிக்க (அது என்ன திரவமா குடிக்க ?) எமன் அஞ்சினான். எங்கே அரக்கர்களின் உயிரை எடுத்தால், இராவணன் தன்  உயிரை எடுத்து விடுவானோ என்று அஞ்சி அரக்கர்களின் உயிரை எடுக்காமல் இருந்தான்.

விச்வாமித்ரனின் தூண்டுதலால், இராமன் தாடகை என்ற அரக்கியை கொன்றான். 

அன்று தான் கூற்றுவனும் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு அரக்கர்களின் உயிரின் சுவையை சிறிது அறிந்தான்...பின்னால் பெரிய விருந்து அவனுக்கு வரக் காத்து இருக்கிறது....

பாடல்


வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே.

பொருள்

வாச = வாசமுள்ள 

நாள் மலரோன் = புதிய மலர், வாடாத மலர் (தாமரை மலர்) மேல் இருக்கும் பிரமன் 

அன்ன = போன்ற

மா முனி = பெரிய முனிவன் (விஸ்வாமித்திரன்)

பணி மறாத = சொன்ன சொல் மாறாமல் அப்படியே கேட்டு. இராமன் மேல் பெண்ணை கொன்ற பழி வரக் கூடாது என்று, பிரமன் போல் அறிவில் சிறந்த முனிவன் சொன்ன சொல்லை அப்படியே கேட்டு இராமன் செய்தான் என்று பழியை தூக்கி விஸ்வாமித்திரன் மேல் போடுகிறான் கம்பன். வேதம் சொன்ன பிரமன் போன்றவன் விஸ்வாமித்திரன். அவனுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டது என்று. அவன் சொன்னதை இராமன் அப்படிஎய் செய்தான். இராமன் பாவம். என்று இராமனுக்கு ஒரு வக்கலாத்து வேறு இங்கு. 

காசு உலாம் = மணிகள் பொருந்திய
 
கனகப் பைம் பூண் = சிறந்த பொன்னால் ஆன அணிகலன்களை

காகுத்தன் = (அணிந்த) காகுந்தன், (இராமன்)

கன்னிப் போரில் = முதல் போரில். முதல் போருங்க. முன்ன பின்ன போரிட்டு இருந்தால் தெரியும்...இந்த முதல் போரில், ஆசான் விஸ்வாமித்திரன் சொன்னபடி செய்த நல் மாணாக்கனாக இருந்தான் இராமன். கம்பனுக்கு இராமன் மேல் அவ்வளவு வாஞ்சை. 

கூசி = ஆசை இருந்தாலும், அரக்கர்களின் உயிரை  எடுக்க - கூச்சப்பட்டு 
 
வாள் = வாள் முதலிய கூறிய ஆயுதங்களை கொண்ட 

அரக்கர்தங்கள் குலத்து = அரக்கர் குலத்தில் உள்ளவர்களின்

உயிர் குடிக்க அஞ்சி = உயிர் குடிக்க அஞ்சி 

ஆசையால் உழலும் கூற்றும் = ஆசையால் வருந்தும் கூற்றுவனும் (உயிரையும் உடலையும் கூறு போடுவதால் அவன் கூற்றுவன்)

சுவை சிறிது அறிந்தது அன்றே = கொஞ்சம் taste பார்த்தான் 

3 comments:

  1. ஸ்ரீ ராமனின் முதல் வதமே தாடகையைத்தான். தனுர் வேதத்தின்படி பெண்ணை வதம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் தாடகை வதத்தை எப்படி சரி என்பது? தாடகை என்பவள் உருவத்தில் பெண்ணாக இருந்தாலும், குணத்தால் அவள் பெண் அல்ல என்று விசுவாமித்திரர் Interpret செய்கிறார். அவரது முடிவை ஸ்ரீ ராமனிடம் சொல்ல, ஸ்ரீ ராமன் வதம் செய்கிறார்.

    உதாரணமாக கீழ்க்கோர்ட் முடிவு சொன்ன பின், மேல் கோர்டிற்கு எதற்காக செல்லவேண்டும். எல்லோருக்கும் ஒரே சட்டம் தானே. மேல்கோர்ட் வேறுவிதமாக முடிவெடுத்தால், கீழ்க்கோர்ட்டின் முடிவு சட்டத்தின் அடிப்படையில் எடுக்கவில்லை என்று அர்த்தமா? கிடையாது. மேல் கோர்ட்டானது சட்டத்திலிருந்து விலகி வேறு முடிவை எடுப்பதில்லை; ஆனால் கீழ்கோர்ட் எந்த சட்டத்தின் படி முடிவெடுத்ததோ அதன் உண்மையான அர்த்தத்தை Interepret செய்கிறது.

    இங்கும் விசுவாமித்திரர் மேல்கோர்ட் மாதிரி தாடகை பெண் அல்ல என்று Interpret செய்து முடிவெடுத்ததை ஸ்ரீ ராமன் நடைமுறைப் படுத்துகிறார். ஸ்திரிவதம் கூடாது என்கிற ஸ்ரீ ராமனின் சந்தேகமும், தாடகை வதம் ஸ்ரீ ராமனின் முடிவல்ல என்பதும் கம்பராமாயண வரிகளில் தெளிவாக இருப்பது ரசிக்கத்தக்க ஒன்று.

    இந்தக் கருத்து பேரா. அ.ச.ஞானசம்பந்தம் அவர்களுடையது.

    ராமாயணத்தில் உள்ள மூன்று வகை வதங்களைப் பற்றின சுவாரசமான கருத்துக்களை வேறு இடுகையில் ரசிப்போம்.

    ReplyDelete
  2. "கூற்றுவன்" என்ற சொல்லுக்குப் பொருள் இப்போது புரிந்தது.

    இந்த நாலு வரிப் பாட்டில் என்னவெல்லாம் கருத்து!

    TRR அவர்கள் எழுதிய கருத்தும் இரசிக்கத் தக்கது.

    ReplyDelete