Pages

Wednesday, January 23, 2013

தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன்


தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன் 


திரு ஞானசம்பந்தர் மிக இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று பாடத் தொடங்கினார் 

திருவெண்காடு !

ஒரு சிறிய கிராமம். அமைதியான ஊர். ஊரின் நடுவே ஒரு கோவில். கோவிலுக்கு அருகே குளம். சில்லென்ற நீர் நிறைந்த குளம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாமரை மலர்கள் இருக்கின்றன. தாமரையோடு சேர்ந்து தாழை மலர்களும் அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கின்றன.  சூரிய ஒளி பட்டு அந்த தாழை மலர்கள் மெல்ல விரிகின்றன. அவை அப்படியே காற்றில் அசைகின்றன.  அப்படி அசையும் போது, அவற்றின்  நிழல் குளத்தில் விழுகிறது. அந்த குளத்தில் உள்ள மீன்கள் அங்கும் இங்கும் அலைகின்றன. 

இவ்வளவு தாங்க இருக்கு. நீங்களும் நானும் பார்த்தால், ஆஹா என்ன ஒரு இனிமையான இடம் என்று இரசித்து விட்டும் வருவோம்.

ஞான சம்பந்தர், இளம் ஞானி. பார்க்கிறார். 

அவருக்கு என்ன தோன்றுகிறது பாருங்கள்.  

மடல் விரியும் தாழை மலரின் நிழலை அந்த குளத்தில் உள்ள மீன்கள் பார்க்கின்றன. அந்த மீன்களுக்கு அந்த நிழல் ஏதோ அவைகளைப் பிடிக்க வரும் குருகு (ஒரு வித பறவை) போல் இருக்கிறது. அந்த குருகுக்கு பயந்து, அந்த மீன்கள்  தாமரை மலரின் அடியில் ஒளிந்து கொள்கின்றன. இதைப் பார்த்து அங்குள்ள கடல் முத்துகள் சிரிக்கின்றன. அப்படிப் பட்ட ஊர் திருவெண்காடு. 
 

பாடல் 
  
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

பொருள்

விடமுண்ட = விடம் உண்ட = விஷத்தை உண்ட = ஆலகால நஞ்சை உண்ட

மிடற்றண்ணல் = மிடற்று அண்ணல் = கழுத்தை உடைய அண்ணல் 

வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற திருத் தலத்தில்

றண்புறவின் = தண் + புறவின் = குளிர்ந்த நெய்தல் நிலத்தில்

மடல்விண்ட = மடல் விரிந்த 

முடத்தாழை மலர் = முடத் தாழை (ஒரு வித மலர்) 

நிழலைக் = அந்த மலரின் நிழலை 

குருகென்று = குருகு என்று (குருகு - ஒரு சிறிய கரிய பறவை)

தடமண்டு = நீர்த் தடாகத்தில் வசிக்கும் 

துறைக்கெண்டை = கெண்டை மீன் 

தாமரையின் பூமறையக் = தாமரை மலரின் கீழ் மறைந்து கொள்வதைப் பார்த்து 

கடல்விண்ட = கடலில் இருந்து தெறித்து விழுந்த 

கதிர்முத்தம் = கதிர் ஒளி வீசும் முத்துகள் 

நகைகாட்டுங் காட்சியதே = சிரிப்பதை போல் இருக்கிறது. 

தேவாரத்தை இறை நம்பிக்கைகாக படிக்காவிட்டாலும், இலக்கிய இரசனைக்காக படிக்கலாம். 

அது மட்டும் அல்ல...இந்த உலகில் நிறைய விஷயங்களைப் பார்த்து நாம் பயப் படுகிறோம். அப்படி ஆகி விடுமோ, இப்படி ஆகி விடுமோ என்று நிழல் பார்த்து பயந்த மீன் போல் இந்த சம்சார சாகரத்தில் கிடந்து பயந்து உலழல்கிறோம். எல்லா பயத்திருக்கும், அவன் திருவடி தாமரைகளே புகல்....

2 comments:

  1. இலக்கிய நயத்திற்காக படிக்க ஆரம்பித்தால் இறை நம்பிக்கை வந்து விடும். இந்த பாடலில் கூட நீங்கள் வர்ணனையில் தொடங்கி சரணாகதியில் முடித்திருக்கிறீர்களே.அருமை .

    ReplyDelete