திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்
பிறர்க்காக வாழ்வது, மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பம் காண்பது, தியாகம், போன்றவை மனிதர்களுக்கே உரித்தானது.இரத்த தானம் தரும் மான் இல்லை, காட்டின் விடுதலைக்காக சிறை சென்ற சிங்கம் இல்லை, நாள் எல்லாம் பறந்து களைத்து கொண்டு வந்த நெல் மணியை தானம் செய்யும் புறா இல்லை...பிற உயிர்களை சந்தோஷப் படுத்தி அதில் இன்பம் காணுவது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு.
அதை விடுத்து வால் ஒன்று தான் நமக்கும் அதற்க்கும் வித்தியாசம் என்று வாழக் கூடாது.
பால் சோறாக இருந்தால் வயிறு முட்ட சாப்பிடுவேன். வாழை, பலா, மா என்று பழம் ஏதாவது கிடைத்தால் அதன் தோலைக் கூட கிள்ளி யாருக்கும் தர மாட்டேன். எனக்கு வால் மாட்டும் தான் இல்லை. இருந்திருந்தால், வனத்தில் வாழும் ஒரு மிருகமாக இருக்க எல்லா தகுதியும் உள்ளவன். நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் வள்ளல் பெருமான்
பாடல்
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்
பொருள்
பாலிலே கலந்த சோறெனில் = பாலோடு கலந்த சோறு என்றால்
விரைந்தே = வேக வேகமாக
பத்தியால் = ஆர்வத்தோடு
ஒருபெரு வயிற்றுச் = என் பெரு வயிறு என்ற. பருத்த தொந்தி நம்மதென்று நாம் இருக்க சுடுகாட்டு நாய் நரி பேய் கழுகும் தம்மதென்று தாம் இருக்கும் தான் என்பார் பட்டினத்தார்
சாலிலே = பெரிய பாத்திரத்தில்
அடைக்கத் தடைபடேன் = அடைக்க தயக்கம் கொள்ள மாட்டேன்
வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = வாழை, பலா, மா முதலிய பழங்களின்
தோலிலே எனினும் = தோலில் கூட
கிள்ளி = நகத்தால் கிள்ளி எடுத்து
ஓர் சிறிதும் = ஒரு சின்ன துண்டு கூட
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = என்னிடம் வந்தவர்களுக்கு தர துணிய மாட்டேன்
வாலிலேன் = எனக்கு வால் மட்டும் தான் இல்லை
இருக்கில் = இருந்திருந்தால்
வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = நான் காட்டிலே மற்ற மிருகங்களோடு ஒன்றாக வாழ நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்
என்செய்வேன் எந்தாய் =நான் என்ன செய்வேன், என் தந்தையே
Pattinathar poem is too good. where is the full version?
ReplyDeleteDifferent thought.
ReplyDelete