திருமந்திரம் - உடம்பைத் தழுவி
சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு.
ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு.
இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும்.
இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும்.
இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால் என்ன செய்யும்?
நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.
பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..
இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கும்.
சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ?
நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்
பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....
சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர்
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
என்பது பிரபந்தம்.
வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம்.
பாடல்:
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே
பொருள்
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி = உடம்பும் உடம்பும் ஒன்றை ஒன்று தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார் = அந்த உடம்புகளுக்குள் இருக்கும் உயிரை யாரும் அறிய மாட்டார்கள்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் = உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே = மடத்திற்குள் புகுந்த நாய் போல அங்கும் இங்கும் நோக்கம் போல மயங்கி உழலுவார்கள்
No comments:
Post a Comment