Pages

Wednesday, January 9, 2013

திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம்


திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம் 


நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

தீயதை சொல்லக் கூடாது என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். 

ஆனால் வள்ளுவர், தீயதை சொன்னால் கூடப் பரவாயில்லை ஆனால் பயனிலாத சொற்களை சொல்லமால் இருப்பது நல்லது என்கிறார். 

கொஞ்சம் பொறுங்கள். தீயவை என்று வள்ளுவர் நேரடியாக சொல்லவில்லை. நலம் பயக்காத சொற்கள் என்று கூறுகிறார். நல்லது இல்லாததை சொன்னாலும் சொல்லுங்கள், பயனில்லாததை சொல்லாதீர்கள் என்கிறார்.

இல்லையே...எங்கேயோ இடிக்குதே. அது எப்படி வள்ளுவர் நல்லது இல்லாத சொல்லலி சொல்லச் சொல்லுவார் ? சரியா இல்லையே என்று நினைத்தால்...பரிமேல் அழகர் இந்த குறளுக்கு சற்று வேறு விதமாக விளக்கம் தருகிறார். 


நயம் என்ற சொல்லுக்கு நிறைய பொருள் உண்டு. ஈரம், இன்பம் என்று எல்லாம் கூட பொருள் உண்டு. 

கமாவை, சான்றோருக்கு அப்புறம் போடுங்கள் 

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்,  
பயனில சொல்லாமை நன்று.

அதாவது, சான்றோர் எப்போதும் நமக்கு இனிமையான சொற்களையே கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில சமயம் நம் மனதிற்கு கசப்பான விஷயத்தை கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் பயனில்லாத விஷயங்களை கூறக் கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். 

இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சான்றோர் எனப்படுபவர் எப்போதும் நமக்கு பயனுள்ள சொற்களையே சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமக்கு பிடிக்கா விட்டாலும், அந்த சொற்கள் நமக்கு பயனுள்ளவை  என்று நாம்  அறிந்து  கொள்ள  வேண்டும்.

அவர்கள் சொல்வதில்  உள்ள  விஷயங்களை நாம்  எடுத்துக் கொண்டு, அவற்றை  நல்ல  வழியில்  பயன்  படுத்த  வேண்டும். 

 வள்ளுவர் மட்டும் அல்ல, நமக்கு பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்களும் வேண்டும்...இவற்றைப் புரிந்து கொள்ள.

1 comment:

  1. அதை எடுத்து சொல்ல நீங்களும் வேண்டும். நன்றி.

    ReplyDelete