Pages

Monday, February 4, 2013

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல்

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல் 

உணவு. 

உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு.

அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணம் ஆகி விடும் 

மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 

ஔவையார்  இப்படி ஏழு வார்த்தைகள் எல்லாம் உபயோகப் படுத்த மாட்டார். இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள்தான் உபயோகப் படுத்துவார் 

மீதூண் விரும்பேல் 

அதிகமான உணவை விரும்பாதே. 

சில பேருக்கு உணவை கண்ட மாத்திரத்திலேயே எச்சில் ஊறும். அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு " மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டேன்...மூச்சு வாங்குது " என்று இடுப்பு பட்டையை (belt ) கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொள்வார்கள். 

சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வராது. 

சாம்பார், ரசம் இரசம் , காரக் குழம்பு, மோர் குழம்பு, தயிர், பழம், பீடா, ஐஸ் கிரீம், என்று ஒவ்வொன்றாக உள்ளே போய்  கொண்டே இருக்கும்.

எப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது ? 

மீதூண் விரும்பேல்.

முதலில் அதிகமாக சாபிடுவதற்கு விரும்புவதை நிறுத்த வேண்டும்.

அந்த உணவு விடுதியில் (hotel ) அது நல்லா இருக்கும், இந்த உணவு விடுதியில் இது நல்லா இருக்கும், என்று பட்டியல் போட்டுக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய கூடாது. 

அளவு இல்லாத (unlimited ) உணவை சாப்பிடக் கூடாது. அளவு சாப்பாடு நலம் பயக்கும் 

நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். 

உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோஷம் அடைவோம் 

விருப்பம் குறைந்தால் , அளவு குறையும்.

அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும் 

மீதூண் விரும்பேல்...

1 comment: