Pages

Wednesday, February 6, 2013

இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள்


இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள் 



இராமாயணம் வெறும் ஒரு கதை சொல்லும் காப்பியம் மட்டும் அல்ல.

அது வழி நெடுக வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்களை தருகிறது

வாழ்கை நெறி, உண்பது, உறங்குவது, (ஆம், எப்படி படுத்து உறங்க வேண்டும் என்று கூட சொல்கிறது ), அரசியல், உளவியல் (psychology ) என்று எத்தனையோ நல்ல விஷயங்களை தருகிறது.

என்ன கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.


ஒரு பிரச்சனை என்று வந்து விட்டால் அதை எப்படி சரி செய்து விடை காணுவது ?


பிரச்சனையில் சம்பந்தப் பட்டவர்கள் பேசி, விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணலாம்.

அந்த பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையே இருக்கலாம், அலுவகலத்தில் அதிகாரிகளுடனோ, அல்லது அங்கு வேலை பார்ப்பவர்களுடனோ இருக்கலாம்.

எங்கு எப்படி பிரச்சனை இருந்தாலும் பேசித்தான் தீர்க்க வேண்டி இருக்கிறது

பொதுவாக பிரச்சனைகளை பேசும் போது  பேச்சு சூடு அடைந்து, இரு தரப்பும் கோபம் அடைந்து, வார்த்தைகள் தடித்து, பிரச்சனை முற்றிப் போய்  விடுகிறது.

 முதலில் இருந்த பிரச்சனை போக, இப்போது பேசிய பேச்சில் வந்து விழுந்த வார்த்தைகளும் சேர்ந்து பிரச்சனையையை இன்னும் பெரிதாக்கி விடுகிறது.


பேச்சில் இனிமை வேண்டும். இனிமையாகப் பேசினால் எந்த பிரச்சனையும் சுமுகமாக தீரும். எதிரில் இருப்பவரின் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் புண் படாதபடி பேச வேண்டும்.


கார்காலம் முடிந்து விட்டது சீதையை தேட ஆள் அனுப்புவதாக சொன்ன சுக்ரீவன் பூவியல் நறவம் (தண்ணி அடித்துவிட்டு) ஜாலியாக இருக்கிறான். 

இராமன் கோவித்து இலக்குவனை அனுப்புகிறான். 

கோபத்தோடு இலக்குவன் வருகிறான் 

அவனை எப்படி சமாளிப்பது ? அனுமன் தாரையை அவன் முன் அனுப்புகிறான். 

தாரை பேசுகிறாள். எப்படி பேச வேண்டும் என்பதை அவளிடம் பார்த்து படிக்க வேண்டும். 

"ஐயா, நீ கோபத்தோடு வருவதை பார்த்து வானர சேனைகள் பயந்து இருக்கின்றன. உன் உள்ளத்தில் ஏதோ கோபம் இருக்கிறது ஆனால் என்ன என்று தெரியவில்லை...அது என்ன என்று தயவு செய்து சொல்லு....ஆமா , நீ இராமனை விட்டு எப்போதும் பிரியவே மாட்டியே , எப்படி அவனை விட்டு இங்கு வந்தாய் " என்று கேட்டாள் - இசையினும் இனிய சொல்லாள்.

அவள் பேசியது இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக பேசினால் யாருக்கு தான் கோவம் தணியாது ?

முதலில் அவனை உயர்த்தி பேசுகிறாள் - உன் கோபத்தை பார்த்து சேனை வீரர்கள் பயந்து போய்  இருக்கிறார்கள் நீ பெரிய ஆள் என்ற அர்த்தம் 

நீ சொல்லாமலேயே கோபப் படுகிறாய் - உன் கோபத்திற்கு காரணம் தெரியவில்லை. 

அப்புறம், நீ இராமனை விட்டு பிரியவே மாட்டியே எப்படி வந்த என்று கேட்பதின் மூலம், அவன் மனதின்  மென்மையான பாகத்தை தொடுகிறாள் இராமனின் பேரை சொன்னவுடன் இலக்குவன் மனம் உருகுகிறது. அது மட்டும் அல்ல, நீ சீக்கிரம் அங்க போ என்ற அர்த்தம் தொனிக்கிறது. 

பாடல் 
  
'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர!

செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றாள்;
'ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள், இசையினும் இனிய சொல்லாள். 


பொருள் 




வெய்தின் = கோபத்தோடு 

 நீ வருதல் நோக்கி = நீ வருவதை பார்த்து 
 
வெருவுறும் சேனை = பயப்படும் சேனை 


 வீர! = வீரனே 


செய்திதான் உணர்கிலாது = என்ன காரணம் என்று தெரியாது


திருவுளம் தெரித்தி = உன் உள்ளத்தில் உள்ளதை சொல்லு


 என்றாள் = எற்றாள்

'ஐய! = ஐயனே

 நீ = நீ

ஆழி வேந்தன் = இராமன்

அடி இணை பிரிகலாதாய் = திருவடிகளை பிரியவே மாட்டியே

எய்தியது என்னை? = எப்படி அதை விட்டு விட்டு இங்கு வந்தாய்

 என்றாள் = என்று கூறினாள்

இசையினும் இனிய சொல்லாள் = இசையினும் இனிய சொல்லாள்

இனிமையாகப் பேசிப் பாருங்கள். பல பிரச்சனைகள் எளிதாக முடிவுக்கு வரும்..

1 comment: