இராமாயணம் - வெந்துயர் கடலில் வீழ்ந்தேன்
வாலி வதைக்குப் பின்னால் சுக்ரீவன் பட்டாபிஷேகம் நிகழ்கிறது.
முடி சூட்டு விழாவிற்குப் பின், இராமன் சுக்ரீவனுக்கு பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.
யாரையும் சிறியவர்கள் என்று எண்ணி ஏளனம் செய்யாதே. அப்படி கூனியையை ஏளனம் செய்ததால் நான் இன்று துயரப் படுகிறேன்.
பாடல்
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.
பொருள்
சிறியர் என்று இகழ்ந்து = நம்மை விட வயதில், வலிமையில், செல்வத்தில், அறிவில் சிறியவர்கள் என்று மற்றவர்களை இகழ்ந்து
நோவு செய்வன செய்யல் = துன்பம் தரும் செயல்களை செய்யாதே
மற்று, இந் நெறி இகழ்ந்து = இதை மறந்து, இகழ்ந்து
யான் ஓர் தீமை இழைத்தலால் = நான் ஒரு தீமை செய்ததால்
உணர்ச்சி நீண்டு = உணர்ச்சி நீண்டு. எப்போவோ செய்ததை அவள் நீண்ட நாட்களாக மறக்க வில்லை உணர்ச்சி நீண்டு.....
குறியது ஆம் மேனி ஆய கூனியால் = குறுகிய மேனியையை உடைய அந்த கூனியால்.
குவவுத் தோளாய்! = குவவு என்றால் குவித்தல், திரட்டுதல். திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே )
வெறியன எய்தி = (நான்) துன்பம் அடைந்து
நொய்தின் =நொந்து
வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன் = வெம்மை தரும் துயரக் கடலில் வீழ்ந்தேன்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு நினைவுரத் தக்கது
No comments:
Post a Comment