Pages

Friday, March 29, 2013

சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள்


சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள் 


குதர்க்கம் பேசுபவர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்திருக்கிறார்கள்.

கோவலனும், கண்ணகியும் புகார் நகரை விட்டு மதுரை நோக்கி செல்லும் வழியில் கவுந்தி அடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரு சோலையில் ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது ஒரு குதர்க்கவாதி வருகிறான். அவனை வறு மொழியாளன் என்கிறார் இளங்கோ. வறுமையான மொழி...மொழியில் சிறப்பு இல்லாமல் வறண்ட மொழிகள்.

அவன் கவுந்தி அடிகளை பார்த்து கேட்க்கிறான் காமனும் அவன் மனைவி ரதியும் போல் இருக்கும் இவர்கள் யார் என்று.

கவுந்தி அடிகள், இவர்கள் என் பிள்ளைகள் என்று கூறினார்

குதர்க்கவாதி - உங்கள் பிள்ளைகள் என்றால் எப்படி அவர்கள் கணவன் மனைவியாக இருக்க முடியும் ?

அதை கேட்ட கண்ணகி நடுங்கிப் போனாள். கையால் காது இரண்டையும் பொத்திக் கொண்டாள். அப்படியே போய் கோவலன் பின்னால் மறைந்து கொண்டாள்.

தீய சொல்லை கேட்டாலே நடுங்கும் குணம். எவ்வளவு சிறந்த குடிப் பிறப்பு. தீச்சொல் சொல்லுவதை விடுங்கள். பிறர் சொல்வதை கேட்டாலே நடுங்கும் குணம்.

பாடல்:


வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-


பொருள்





பாடல் எளிமையான ஒன்று தான். இருப்பினும், வார்த்தைக்கு வார்த்தைக்கு பொருள் இதோ;


வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு = வம்பு பேசும் வறுமையான மொழி உள்ள அவனோடு

கொங்கு அலர் பூம் பொழில் = பூக்கள் நிறைந்த பூஞ்சோலையை

குறுகினர் = அடைந்தனர்

 சென்றோர் = சென்ற அவர்கள் (கோவலன், கண்ணகி, கவுந்தி)

‘காமனும் = மன்மதனும்

தேவியும் = அவன் மனைவி ரதி தேவியும்

போலும் = போல

ஈங்கு இவர் ஆர்? = இங்கு இவர்கள் யார்

எனக் கேட்டு = என்று கேட்டு 

ஈங்கு அறிகுவம்’ என்றே- = இப்போது அறிவோம் என்று கேட்டான்

நோற்று = (நோன்பு) நோற்று, தவம் இருந்து என்று கொள்ளலாம்

உணல் = உண்ணும்

யாக்கை = உடலை கொண்ட

நொசி தவத்தீர்! = நொசி என்றால் வருந்தும். அப்படி கடினமான தவத்தை மேற்கொன்டவரே

உடன் = உங்களுடன்

ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ = கூட வந்த இவர்கள் யார் என்று கேட்க்க 


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர் = என் பிள்ளைகள்

 மானிட யாக்கையர் = மன்மதனும், ரதியும் அல்ல, நம்மை போன்ற மனித உடலை  கொண்டவர்கள் தான்.


பக்கம் நீங்குமின் = வழியை விடு

 பரி புலம்பினர்’ என = பரி என்றால் மிகுந்த என்று அர்த்தம். வழி நடந்த களைப்பினால் மிகவும் சோர்ந்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் = ஒரு வயிற்றில் பிறந்தோர்

ஒருங்குடன் வாழ்க்கை = ஒன்றாக வாழ்வது

கடவதும் உண்டோ? = நடக்கக் கூடியாதா ? 

கற்றறிந்தீர்!’ என- = நீங்க படிஞ்சவங்கதான என்று கூறினான்

"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு = அப்படி அவன் கூறிய தீச் சொல்லை கேட்டு

செவிஅகம் புதைத்து = காதினை இரண்டு கைகளால் மூடி. புதைத்து என்றால் கொஞ்சம் கூட வெளியே தெரியாமல் மூடி 

காதலன் = கோவலன் (கணவனை காதலன் என்று கூறுவது எவ்வளவு இனிமை)

முன்னர்க் கண்ணகி நடுங்க = கண்ணகி நடுங்கினாள்

எள்ளுநர் போலும் இவர் = இவன் கேலி செய்கிறான் போல

என் பூங்கோதையை = என் பூங்கோதையான கண்ணகியை (அப்ப கூட கண்ணகி தலையில்  பூச்சூடி இருந்திருக்கிறாள்...)

முள்ளுடைக் காட்டின் = முட்கள் நிறைந்த காட்டில்

முது நரி ஆக’ என = வயதான நரியாகப் போ என்று சபித்தாள் அவனை. முட்கள்  நிறைந்த காட்டில் வயதான நரியாகப் போ என்றாள். இளமையான நரி என்றால் கண்ணு நல்லா தெரியும். முள்ளு குத்தாமல் தப்பித்துக் கொள்ளும். வயதான நரி என்றால், கண்ணு தெரியாமல், முள்ளு குத்தி நல்லா கஷ்டப்படும்

கண்ணகி என்றால் ஏதோ ஒரு முரட்டுப் பெண் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்....சினிமாவில் வயதான கதாநாயகிகளை பார்த்து பார்த்து அப்படி நினைத்து  கொண்டு இருக்கிறோம்.

சிலப்பதிகார கண்ணகி, இளமையான அழகான இனிமையான அன்பான மனைவி.

வேறு என்ன சொல்லப் போகிறேன், நேரம் கிடைத்தால் மூல நூலைப் படியுங்கள்.

எத்தனை உரை படித்தாலும் மூல நூல் படிப்பது மாதிரி வராது....






1 comment:

  1. சபித்தது யார்? கோவலனா?

    ReplyDelete