Pages

Sunday, March 24, 2013

இராமாயணம் - அழியா அழகு


இராமாயணம் - அழியா அழகு 


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


இராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகம் போகிறார்கள். 

இராமன் மேல் வெயில் அடிக்கிறது. கம்பனுக்குத் தாங்க முடியவில்லை. இந்த பகலவன் இராமனை இப்படி சுடுகிறானே என்று தவிக்கிறான். 

பகலவனுக்கு ஆயிரம் பெயர்  இருக்கிறது. சூரியன், ஞாயிறு, பகலவன், ஆதவன் என்று ஆயிரம் பெயர் இருந்தாலும், கம்பன் "வெய்யோன்" என்று குறிப்பிடுகிறான். வெய்யோன் என்றால் கொடியவன் என்று பொருள் 

வெய்யோனின் ஒளி இராமனின் மேல் படுகிறது. மற்றவர்கள் மேல் பட்ட ஒளி பிரதிபலிக்கும். இராமன் மேல் பட்ட ஒளி, அவன் மேனியின் ஒளியில் மறைந்து போனதாம். 

சூரியனின் மேல் டார்ச் லைட் அடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியில் மழுங்கிப் போனது.

கம்பன் இன்னும் மெருகு ஏத்துகிறான் பாடலுக்கு.

சூரியனில் இருந்து வருவது ஒளி; இராமனின் மேனியில் இருந்து வருவது சோதி. ஜோதி என்பது ஒரு ஆன்மீக அர்த்தம் கொண்டது. விளக்கில் உள்ளதும் நெருப்புதான், சிகரட் லைட்டரில் உள்ளதும் நெருப்புதான் என்றாலும் விளக்கில் உள்ளதை ஜோதி என்று சொல்லுவது மாதிரி.

வெய்யோனின் ஒளி வெறும் ஒளி அவ்வளவுதான். இராமனின் உடலில் இருந்து புறப்படுவதோ விரி ஜோதி...வினைத்தொகை...விரிந்த விரிகின்ற இன்னும் விரியும் ஜோதி. 

அடுத்த இரண்டு வரி சீதைக்கும் இலக்குவனுக்கும். பொய்யோ என்னும் இடை உள்ள சீதை, இளையவனான இலக்குவனோடும் போனான். 

போனவன் யார் ? அவர் எப்படி இருப்பான் ?

அவன் மேனி வண்ணம் சொல்ல வேண்டும்.

கறுப்பாக  இருக்கிறான். கறுப்புக்கு எதை உதாரணம் சொல்லலாம் என்று யோசிக்கிறான் கம்பன். 

கண் மை நல்ல கறுப்பு தானே ...அதை சொல்லலாம் என்று நினைத்தான். இருந்தாலும் சந்தேகம் ....

மையோ ? 

என்று கேள்வியோடு கேட்க்கிறான்.

சரி இல்லை. மை ரொம்ப மலிவான பொருள். இராமனை அப்படி ஒரு மலிவான பொருளுக்கு உதாரணம் சொல்ல முடியாது என்று நினைத்து 

மரகதமோ ?

என்று கேட்கிறான். இல்லையே, மரகதம் ஒரு சின்ன பொருள். இராமனின் அழகை எப்படி ஒரு சின்ன பொருள் உவமையாக கொள்ள முடியும் ? மேலும், அது எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். இராமன் உருவம் அப்படியா? நாளும் ஒரு புதுமை தெரியுமே...அப்ப வேற என்ன சொல்லலாம் என்று சிந்திக்கிறான் ...
 
மறி கடலோ ?


அலை பாயும் கடலோ ? ம்ம்ம்.அது தான் சரி...இராமனின் அழகு போல் பரந்து விரிந்தது ...ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ....அது தான் சரி...என்று நினைக்கிறான்...அப்புறமும் அவனுக்கு திருப்தி இல்லை..இந்த கடல் எவ்வளவு பெரிதாய் இருந்தால் என்ன ? ஒரே உப்புத் தண்ணீர் ...இந்த கடலால் என்ன பிரயோஜனம் ? மேலும் இந்த கடல் ஒரே இடத்தில் தானே இருக்கிறது...இராமன் அப்படியா ? கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவானே...அப்படி எது இருக்கும் ?

கறுப்பாகவும் இருக்க வேண்டும், நாளும் நாளும் மாறிக் கொண்டும் இருக்க வேண்டும், இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்ய வேண்டும் ? அப்படி என்ன இருக்கிறது ?

ஹா..மழை முகில் அது தான் சரி....கறுப்பா இருக்கு, மாறிக் கொண்டே இருக்கிறது, உயிர் வாழ வழி செய்கிறது, நாம் இருக்கும் இடம் தேடி வருகிறது... மழை முகில் தான் சரி என்று நினைக்கிறான்....

அப்புறமும் திருப்தி இல்லை...மழை சில சமயம் வரும், சில சமயம் வராது.இராமன் அப்படி இல்லையே...எப்போதும் வருவானே...மேலும் முகில் சில சமயம் அதிக மழை பெய்தும் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும்...இராமன் கருணை அப்படி அல்லவே....

பின் என்னதான் சொல்லுவது...

ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியவில்லையே என்று தவித்து "ஐயோ " என்று வாய்விட்டே அலறிவிட்டான்..கம்பன். 

அறிவு ஆண்டவனை பற்றி சொல்ல நினைத்து சொல்ல முயற்சி செய்து கலைத்து போனது....அறிவு நின்ற இடத்தில் உணர்வு மேலிட்டது...."ஐயோ" என்பது உணர்வின் வெளிப்பாடு...ஆண்டவனை உணர முடியும்...அறிய முடியாது..என்பதை சொல்லாமல் சொல்லும் அற்புதமான பாடல் ....

 சரி, உணர்வு மேலிட்டது...ஐயோ என்று சொல்லிவிட்டான்...இன்னும் திருப்தி இல்லை....

சில பேருக்கு உடல் அழகாக வடிவமாக இருக்கும்...வடிவம் ஒரு அழகுதான்....ஆனால் அதுவே அழகாக ஆகி விட முடியாது...உடல் அழகோடு உள்ள அழகும் சேர வேண்டும்...மேலும் வடிவம் என்பது வயது ஆக ஆக மாறிக் கொண்டே போகும்.கூன் விழும் முடி நரைக்கும் பல் விழும்...வடிவு மாறும் ....ஆனால் இராமனின் வடிவு காலத்தால் அழியாதது....

இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

எவ்வளவு இனிமையான பாடல்....இப்படி 12,000 பாடல் இருக்கிறது கம்ப இராமாயணத்தில்...

நேரம் கிடைக்கும் போது மூல நூலை படித்துப் பாருங்கள். நிறைய பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். அதையும் படியுங்கள். 

திகட்டாத தேன் தமிழ் பாடல்கள்....






5 comments:

  1. நண்பரே...

    வணக்கம், கம்பராமாயணக் கடலில் நீந்த வேண்டும் என்று பல நாட்கள் ஆசை, உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பாடல்களும்,சீர்பிரித்தலும்,சீர்களுக்கு பொருள் கூறுதலும்,பாடல்களின் முழுவிளக்கமும் மேலும் ஆவலை தூண்டுகின்றன. தாங்கள் கூறும் வகையிலான விளக்கங்களுடன் சந்தையில் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?எனில் புத்தகம் மற்றும் ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட வேண்டும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன் நண்பரே.....நன்றி....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இராமாயணம் மூலமும் உரையும் பற்றி ஏராளமான புத்தககள் இருக்கின்றன. நான் எழுதுவது பல புத்தங்கள், உரைகள், உபன்யாசங்கள் (நான் கேட்டவை), தமிழ் அகராதி (வார்த்தைகளின் அர்த்தங்கள்) போன்றவற்றின் தொகுப்பு. சொந்தம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. எல்லாம் இரவல் தான். கேட்டதை, பார்த்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளுகிறேன். அவ்வளவுதான்.

      வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்
      வாய்ப்புற தேனை ஊர் புறத் தருவேன்

      என்று கண்ணதாசன் கூறிய மாதிரி பூக்களில் உள்ள தேனை சேகரித்து தருகிறேன். அவ்வளவுதான் என் வேலை.

      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  2. இந்தப் பாடலுக்கு நீ முன்பே உரை எழுதிப் படித்திருக்கிறேன். கம்ப ராமாயணத்தில் இது ஒரு அருமையான பாடல். மிக அழகான உரை. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே! இன்று காலை மேலே நீங்கள் குரிப்பிட்டிருந்த பாடலினைப் படித்துக் கொண்டிருந்தேன். நெஞ்சை கவர்ந்த இப்பாடலினை பற்றி இணயத்தில் யாராவது எழுதி இருக்கின்றார்களா என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது. மிகவும் அருமை தொடருங்கள்.

    ReplyDelete