இராமாயணம் - வன்மையை மாற்றும் காமம்
நிறைய பேர் தங்கள் குறைகளை மற்றவர்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள். அவனோட சேர்ந்து குடிச்சு கெட்டுப் போனேன், கெட்ட சகவாசத்தால் குடி கூத்து என்று அலைந்து சொத்தை அழித்து விட்டேன், நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி படிக்காமல் இருந்ததால் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்று தங்கள் குறைகளை மறைத்து மற்றவர்கள் மேல் பழி போடுவதை பார்க்கிறோம்
சீதையை பற்றி சூர்பனகை சொன்ன பிறகு இராவணனின் மனம் மாறியது. கற்ற கல்வி, அவன் கொண்ட பக்தி, வீரம், மானம் எல்லாம் போயிற்று. அது சீதை அவன் மனம் புகுந்ததாலா அல்லது இயற்கையாகவே அவனுக்கு அந்த சபல புத்தி இருந்ததா ?
எத்தனை ஆயிரம் வாளுக்கும், ஈட்டிக்கும், அம்புக்கும் ஈடு கொடுத்த அவன் நெஞ்சம் மன்மதனின் மலர் அம்பின் வேகம் தாங்காமல் துவண்டு விட்டது.
பாடல்
பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே
பொருள்
பொன் மயம் ஆன நங்கை = பொன் போன்று ஒளி வீசும் சீதை
மனம் புக = மனதில் புக
புன்மை பூண்ட தன்மையோ ? - இழிவடைந்தானோ ?
அரக்கன் = அரக்கானாகிய இராவணன்
தன்னை அயர்த்தது = அயர்த்தல் என்றால் மறத்தல். தன்னை மறந்தது. தான் யார், தன் குலம் என்ன, வீரம் என்ன என்று எல்லாம் மறந்தான்
ஓர் தகைமையாலோ = தகைமை என்றால் இயற்கையான குணம், தகுதி. அழகான பெண்ணிடம் மனதை பறிகொடுப்பது அவன் இயற்கையாக இருக்கலாம்
மன்மதன் வாளி தூவி = மன்மதனின் அம்பு தூவி (மலர் போல் தூவினான்.)
நலிவது = மெலிவது, துவள்வது, சோர்வது
ஓர் வலத்தன் ஆனான்? = வலம் என்றால் சுற்றுதல், சூழ்தல் என்று பொருள். நகர் வலம், கோவில் பிரகாரத்தை வலம் வருவது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. சோர்வு அவனை சூழ்ந்து கொண்டது. எங்க போனாலும் விட மாட்டேன் என்கிறது.
வன்மையை மாற்றும் ஆற்றல் = ஒருவனின் வீரத்தை, வன்மையை மாற்றும் ஆற்றல்
காமத்தே வதிந்தது அன்றே = வதித்தல் என்றால் வழங்குதல், தாரளமாக கொடுத்தல். வதி என்றால் வழி என்றும் ஒரு பொருள் உண்டு. காமம் கொண்டால் அது வன்மையை மாற்றும் இயல்பை கொடுக்கும், அல்லது அங்கு இட்டுச் செல்லும்
எல்லா தவறுகளுக்கும் நாமும் ஒரு காரணம். வெளி உலகம் எவ்வளவுதான் தூண்டினாலும் நம்மிடம் அந்த தவறை செய்யும் ஒரு பலவீனம் இருக்கும்.
காமம், இராவணனையே புரட்டி போட்டது. கைலாய மலையை தூக்கியவனை மலர் அம்பு தூக்கி போட்டு விட்டது. நீங்களும் நானும் எம்மாத்திரம்.
காமம், நம்மை பலம் இழக்கச் செய்யும், செயல் இழக்கச் செய்யும், நாம் யார் என்பதை மறக்கச் செய்யும்.... என்ன செய்கிறோம் என்பதை மறக்கச் செய்யும்.
ரொம்ப கவனம் வேண்டும். மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு எச்சரிக்கைப் பாடலாக எழுதியது போல் இருக்கிறது. நன்றி.
ReplyDeleteவதித்தல் என்பதற்குப் பொருள் தேடியபோது இப்பாடல் கிடைத்தது; நன்றி.
ReplyDelete