Pages

Tuesday, March 12, 2013

இராமாயணம் - இராவணன் கொண்டது காமமா ? காதலா ?


இராமாயணம் - இராவணன் கொண்டது காமமா ? காதலா ?


வழி எங்கும் இராவணன் கொண்டது காமம் என்றே சொல்லிக் கொண்டு வந்த கம்பன், கடைசியில், அதை காதல் என்று முடிக்கிறான்.

காமத்திருக்கும் காதலுக்கும் வேறுபாடு உண்டு தானே.

இராவணன் கொண்டது காதல் என்று மண்டோதரி வாயால் சொல்ல வைக்கிறான் கம்பன்.

இராவணன் இறந்து கிடக்கிறான். மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

இந்தப் பாடலுக்கு என்றே தனியாக ஒரு புத்தகம் போடலாம்.

”வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
இடன் நாடி ழைத்த வாறே?
‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவிதோ ஒருவன் வாளி ! ”


ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்


‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்

மனம் என்னும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதல் என்று சொல்கிறாள். 

மண்டோதரிக்குத் தெரியாதா இராவணனைப் பற்றி ...

மனச்சிறையில் கரந்த  காமம் என்று சொல்லி இருக்கலாம்...சொல்லவில்லை.

அது மட்டும் அல்ல...இராவணன் இறந்த பின் அவன் முகம் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பொலிவாக இருந்ததாம்....

ஒரு வேளை, தான் இறந்த பிறகாவது சீதை தன் காதலின் ஆழத்தை புரிந்து கொள்வாள் என்று நினைத்து இருப்பானோ ?

மும்மடங்கு பொலிந்ததம்மா அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா 

 Tale of Two Cities என்ற நாவலில், கதாநாயகன் ,  கதாநாயகியை மிகவும் நேசிப்பான். விதி வசத்தால் அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளுகிறாள். அவளின் கணவனை புரட்ச்சியாளர்கள் சிறையில் அடைத்து விடுகிறார்கள். அவளின் முன்னாள் காதலன், அதாவது கதாநாயகன், அந்த கணவனை தப்பிக்க வைத்து, அந்த இடத்தில் அவன் இருந்து கொள்கிறான். மறு நாள், புரட்சியாளர்கள் அந்த காதலனை, கில்லடின் என்ற இயந்திரத்தில் வைத்து தலையை வெட்டி விடுகிறார்கள். 

துண்டான அவன் தலை கிடக்கிறது. 

They said of him, about the city that night, that it was the peacefullest man's face ever beheld there. Many added that he looked sublime and prophetic.

வெட்டப் பட்டு கிடந்து தலைகளிலேயே மிகவும் அமைதியான முகம் உள்ளதை இருந்த தலை அவனுடையது தான் என்று....அமைதியும், திருப்தியும், ஒரு ஞானி போன்ற லயிப்பும் இருந்ததாம் அந்த முகத்தில்..

காதலிக்காக உயிரை கொடுத்தவனின் இறந்த, துண்டான தலை கூட அவ்வளவு அழகாக இருந்தது  என்பார் சார்லஸ் டிக்கன்ஸ் ...

அதே போல், அவளுக்காக சண்டை போட்டு உயிரை விட்ட இராவணின் முகம் மும்மடங்கு பொலிந்தன என்றான் கம்பன்.

அது ஏன் பொலிந்தது என்று சொல்லவில்லை...நான் நினைக்கிறேன் சீதையையை  எண்ணித்தான் என்று .....



5 comments:

  1. அருமையானப் பாடலுக்கு அருமையான விளக்கம். இந்த பாடலில் ஓவ்வொரு வரிக்கும் ஒரு Blog எழுதலாம். நன்றி.

    ReplyDelete
  2. கம்ப ராமாயணத்தையும் Tale of two cities யும் இணைத்து எழுதினது அருமை.

    ReplyDelete
  3. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் கூட அந்த புத்த பிக்குவின் முகம் இறந்த பின் இது மாதிரிதான் இருப்பதாக இருக்கும்.

    ReplyDelete
  4. இந்தப் பாடலுக்கு உன் விளக்கம் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் எழுதுக. நன்றி.

    ReplyDelete
  5. மிக ரசமான பதிவு. 'அமர்க்களம்'(இல்லையா பின்னே!)சார்!

    ReplyDelete