கந்தர் அலங்காரம் - இறை தேடல்
இறைவனை தேடுவது ரொம்ப கடினமா ? இல்லவே இல்லை என்கிறார் அருணகிரிநாதர். இன்னும் சொல்லப் போனால் உள்ளதிர்க்குள் மிக எளிமையான வேலை என்கிறார்.
ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்...."கந்தா" என்று சொன்னால் போதும். உங்களுக்கு கந்தன் வேண்டாம் என்றால் உங்கள் கடவுளை சொல்லுங்கள். அவ்வளவுதான்.
ஹா...அது எப்படி...அருணகிரி வேறு என்னவெல்லாமோ தவம் செய்து இருப்பார், பூஜை செய்து இருப்பார்....இல்லாவிட்டால் சும்மா கந்தா என்றால் பலன் கிடைக்குமா ?
அவரே சொல்கிறார் .... இப்படி கந்தா என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் அறியேன் என்கிறார்.
சரி, கந்தா என்று அவன் நாமம் ஜெபிப்போம்....எப்ப பலன் கிடைக்கும் ?
உடனே...கை மேல் பலன் என்கிறார் அருணகிரி. பிற்காலத்தில், அடுத்த பிறவியில் என்று காத்திருக்க வேண்டாம்....கை மேல் பலன்.
உடனடி பலன் மட்டும் அல்ல....நீண்ட நாள் பலனும். நீண்ட நாள் என்றால் எவ்வளவு நாள் ? ஒரு ஒரு வாரம்,, மாதம் , வருடம் ? எவ்வளவு நாள் ?
நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போதில் இருந்து நீங்கள் மரணம் அடையும் வரை அதன் பலன் இருக்கும்.
நீங்கள் கற்ற கல்வி மறந்து போய் விடும். பத்தாம் வகுப்பில் படித்த குரல் ஞாபகம் இருக்கிறதா ? கல்லூரியில் படித்த பாடங்கள் நினைவு இருக்கிறதா ? கல்வி மறந்து கொண்டே வரும். மரணத் தருவாயில் ஒன்றும் ஞாபகம் இருக்காது.
உங்கள் சுற்றம், ஊர் பொது மக்கள் யாரவது உங்களை மரணத்தில் இருந்து காக்க முடியுமா ? கிட்ட இருந்து அழலாம்...வேறு என்ன செய்ய முடியும் ?
கல்வியை விடுங்கள், சுற்றமும் நட்பையும் விடுங்கள்....உங்கள் புலன்கள் உங்களுக்கு துணை செய்யுமா ?
நாக்கு குழறும், கண் பஞ்சடையும், காது கேக்காது...இப்படி உங்கள் புலன்களே உங்களை வஞ்சனை செய்யும். எவ்வளவு செய்து இருப்பீர்கள் இந்த புலன்களுக்கு....கடைசி நேரத்தில் உங்களை கை விட்டு விடும்.
எல்லாம் உங்களை விட்டு விட்டு போய் விடும். எதுவும் உதவி செய்யாது...ஒன்றே ஒன்றைத் தவிர...அவன் நாமத்தை தவிர.
பாடல்
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.
சீர் பிரித்த பின்
மை வரும் கண்டத்தர் மைந்தா கந்தா என்று வாழ்த்தும் இந்த
கை வரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்
பை வரும் கேளும் பதியும் கதற பழகி நிற்கும்
ஐவரும் கை விட்டு மெய் விடும் போது உன் அடைக்கலமே
பொருள்
மை வரும் கண்டத்தர் = மை போல கரிய கண்டத்தை (கழுத்து) உடையவர்
மைந்தா = மைந்தனே
கந்தா = கந்தா
என்று வாழ்த்தும் = என்று வாழ்த்தும்
இந்த = இந்த
கை வரும் தொண்டு அன்றி = கை மேல் பலன் தரும் தொண்டு அன்றி. இறைவனை வழி பட்டால், ரொம்ப நாள் எல்லாம் காத்திருக்க வேண்டாம். கை மேல் பலன் கிடைக்கும்.
மற்று அறியேன் = மற்ற எதையும் அறியேன்
கற்ற கல்வியும் போய் = நான் கற்ற கல்வி அனைத்தும் போய்
பை வரும் கேளும் = துன்பப்படும் உறவினர்களும்
பதியும் = ஊர் மக்களும்
கதற = சுற்றி நின்று கதற
பழகி நிற்கும் = எப்போதும் என்னிடம் பழகி நிற்கும்
ஐவரும் = ஐந்து புலன்களும்
கை விட்டு = எனை கை விட்டு
மெய் விடும் போது = இந்த உடலை விட்டு விட்டு போகும் போது
உன் அடைக்கலமே = உன்னுடைய அடைகலம் நான்
No comments:
Post a Comment