இராமாயணம் - போனானை காத்து போனான்
இராமன் பதினாலு ஆண்டு கழித்து வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. இராமன் வரவில்லை. ஏதோ தாமதம். இராமன் வரும் வரை நாம் இன்னும் கொஞ்ச நாள் ஆளலாமே என்று பரதன் நினைக்க வில்லை. இராமன் கானகம் போகும் போதே பரதன் சொல்லி இருந்தான்..."நீ பதினாலு ஆண்டில் வரவில்லை என்றால் தீக் குளிப்பேன்" என்று.
சத்ருக்கனா, நீ இந்த ஆட்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள். நான் உயிரை விடப் போகிறேன் என்று பரதன் கூறினான்.
சத்ருக்கனன் துடித்துப் போனான்....
இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனவனை காத்து அவன் பின்னால் போனவனும் ஒரு தம்பி. அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தவனும் ஒரு தம்பி.
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி...நல்லா இருக்கு இந்த கதை....
பாடல்
'கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; ''போனவன்
தான் வரும் அவதி போயிற்று'' என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும்
ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே,
இவ் அரசாட்சி! இனிதே அம்மா!
பொருள்
கான் ஆள = கானகத்தை ஆள
நிலமகளைக் = அரசாட்சியை
கைவிட்டுப் = கை விட்டுப்
போனானைக் = போனவனை (இராமனை)
காத்து,= காத்து
பின்பு = அவன் பின்னே
போனானும் ஒரு தம்பி = போனவனும் ஒரு தம்பி (இலக்குவன் )
போனவன் = இராமன்
தான் வரும் அவதி போயிற்று = தான் வரும் காலம் போயிற்று
என்னா,= என்று
ஆனாத உயிர் விட = உயிரை விட
என்று அமைவானும் = என்று நினைக்கும்
ஒரு தம்பி = ஒரு தம்பி (பரதன் )
அயலே நாணாது = வெளியில் சொன்னால் வெட்க்கக் கேடு
யானாம் இவ் அரசு ஆள்வென்? = நானா இந்த அரசை ஆள்வேன் ?
என்னே, = என்னே
இவ் அரசாட்சி! = என்ன அருமையான அரசாட்சி
இனிதே அம்மா! = ரொம்ப நல்லா இருக்கு
எவ்வளவு எளிமையான மொழியில், என்ன அருமையான பாடல்!
ReplyDeleteஅபிராமி அந்தாதி விளக்கவுரை மற்றும் படிக்க முடிந்தது.மேலும் தொடர எண்ணம்.இந்த காலை பொழுதில் மனதை தொடுகிறது உங்கள் தமிழ் எழுத்துக்கள்.வணங்குகிறேன்.
ReplyDelete