Pages

Wednesday, April 17, 2013

திருக்குறள் - லுக்கு


திருக்குறள் - லுக்கு 


பெண்ணின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து இருக்கிறீர்களா ? ரொம்ப கஷ்டம்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பன் கம்பன். 

கண்ணோடு கண் கலத்தல் உடலோடு உடல் சேர்வதை விட அதிக இன்பம் தருவது.

அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

 தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா 
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா 
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- 
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

என்று அபிராமியின் கடை கண்களை பார்த்து உருகுவார் அபிராமி பட்டர்.

தெய்வப் பெண்ணோ, மயிலோ, என்று மயங்கிய ஹீரோ கடைசியில் அவள் கம்மல் அணிந்த மானிடப் பெண்தான் என்று அறிந்து கொண்டதை முந்தைய பாடலில் பார்த்தோம்.

தலைவர் இன்னும் கொஞ்சம் கிட்ட போறார்.  

அவளை பார்க்கிறார். அவளும், போகிற போக்கில் அவன் மீது ஒரு பார்வையை வீசிப் போகிறாள். 

இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை மறந்தது...

தலைவருக்கு பயம்..ஒரு வேளை நம்மை தப்பா எடுத்துக் கொண்டிருப்பாளோ என்று. ...அவள் பார்வை இவன் மனதில் கலவரத்தை உண்டு பண்ணுகிறது....என்ன செய்வது என்ற குழப்பம். திருப்பியும் பார்க்கலாமா ? அவள் பார்வையை தாங்க முடியுமா என்ற பயம் வேற....

அவளின் வெகுளியான (innocent ) முகம், பயந்த சுபாவம், வெட்கம் கலந்த பார்வை எல்லாம் என்னமோ செய்கிறது. 

தானே போராடி வெல்லக் கூடிய ஒருவன் , பெரிய படையையும் துணைக்கு கூட்டிக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்.

அவள் தனி ஆளே என்னை வென்று விடுவாள்..இதோடு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற படையையும் கூட்டிக்  கொண்டு வந்து இருக்கிறாள்...நான் எப்படி அவளை வெல்ல முடியும்....

 

பாடல் 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

சீர் பிரித்த பின் 

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு 
தானை கொண்டு அன்ன உடைத்து 


பொருள் 

நோக்கினாள் = என்னை பார்த்தாள் 

நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு அவளின் எதிர் பார்வை 

தாக்கு அணங்கு = தானே தாக்கி வெல்லும் ஒரு தெய்வப் பெண் 
 
தானை = படை 

கொண்டு அன்ன உடைத்து = கொண்டு வந்ததைப் போல இருக்கிறது ..

 

1 comment:

  1. தாடி வெச்ச வள்ளுவர் இப்படி ஒரு ஜொள்ளு மன்னரா இருந்திருக்காரே!

    ReplyDelete