அபிராமி அந்தாதி - மகிழ்நன்
கண் போன்றவன் என்பதால் கணவன். கண் அவன் என்பதால் கணவன். மனைவியோடு கூடி என்றும் மகிழ்ச்சியாக இருப்பதால் மகிழ்நன் என்றொரு புதிய வார்த்தையை தருகிறார் அபிராமி பட்டர். அபிராமி போல ஒரு பெண்ணை மனைவியாக பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன குறை ?
அம்மா, என் உயிர் மத்திடை பட்ட தயிர் போல தளர்கிறது. இப்படி தளர்வு அடையும் என் உயிருக்கு ஒரு நல்ல கதியை நீ தான் தர வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் (படைத்தல்), அயனும் (காத்தல்), நிலவை தலையில் கொண்ட மகிழ்நன் (உன் கணவன் சிவன் - அழித்தல்) இந்த மூவரும் வணங்கும் சிறந்த அடிகளை கொண்டவளே, சிவந்த திலகம் அணிந்தவளே, சுந்தரியே
பாடல்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
பொருள்
ததியுறு மத்தின் = ததி என்றால் தயிர். மத்திடை பட்ட தயிர். முதலில் தயிர் கெட்டியாக இருக்கும். மத்தை வைத்து கடைய கடைய அதன் உறுதி தளர்ந்து, நீர்த்து போகும்.
வாலி இறந்து கிடக்கிறான். தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள் ...
மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
மத்திடை பட்ட தயிர் போல உயிர் என் உடலில் வந்து வந்து போகிறதே என்று அழுது புலம்புகிறாள். அது போல பட்டரும் சொல்கிறார்...என் உயிர் ஒரு உடம்பை விட்டு இன்னொரு உடம்பு என்று சென்று சென்று தளர்கிறது....மத்து ஒரு முறை தயிரை உள்ளே இழுக்கும், மறு முறை வெளியே தள்ளும். இந்த உயிரை ஒரு உடல் வெளியே தள்ளுகிறது. இன்னொரு உடல் உள்ளே எடுத்து கொள்கிறது.
சுழலும் என் ஆவி = இங்கும் அங்கும் சுழலும் என் ஆவி
தளர்வு = தளர்வுகிறது
இலது ஓர் = அப்படி தளர்வு அடையாமல் இருக்க ஒரு
கதி = வழி
யுறுவண்ணம் = போகும் படி
கருது = கருத்தில் வை.
கண்டாய் = நீ அறிவாய்
கமலாலயனும் = கமலத்தில் உள்ள பிரமனும்,
மதியுறுவேணி = வேணி என்றால் சடை. நிலவை சடையில் உள்ள
மகிழ்நனும் = எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கும் சிவனும்
மாலும் = திருமாலும்
வணங்கி = உன்னை வணங்கி
என்றும் = என்றும்
துதியுறு = துதி செய்யும்
சேவடியாய் = சிவந்த திருவடிகளை கொண்டவளே
சிந்துரானன = சிவந்த திலகம் அணிந்தவளே
சுந்தரியே. = சுந்தரியே , அழகானவளே
No comments:
Post a Comment