Pages

Monday, April 22, 2013

இராமாயணம் - நான் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்னு....


இராமாயணம் - நான் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்னு....



எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். இந்த S  P  பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இவர்கள் எல்லாம் கோவித்து திட்டினால் எப்படி இருக்கும் என்று ? அப்ப கூட அவங்க குரல் இனிமையாகத் தானே இருக்கும் ? அந்த திட்டு கூட இனிமையாகத் தானே இருக்கும் ? இன்னும் கொஞ்சம் சத்தம் போட மாட்டார்களா என்று தானே இருக்கும் ? அதுக்கு பேரு கோபமா ?


குயில் கோபித்து கூவியது மாதிரி என்கிறான் கம்பன், சீதையின் கோபக் குரலை


இராமன், "நீ இங்கேயே இரு, நான் கானகம் போகிறேன்" என்று சொன்னவுடன், சீதை தேம்பி தேம்பி அழுகிறாள். உயிர் உமிழா நின்றாள் என்பான் கம்பன்.

அழுகை பெண்களின் முதல் அஸ்திரம். இராமன் அசையவில்லை.

அடுத்து பிரமாஸ்திரத்தை எடுக்கிறாள் சீதை...

"நான் கூட இருந்தால் உனக்கு துன்பம்....என்னை விட்டு விட்டு போனால், கானகத்தில் உனக்கு இன்பமாய் இருக்குமா ?" என்று கேட்கிறாள்...

என்ன சொல்லுவான் இராமன்....

"உன்னை பிரிந்து இருப்பது ஜாலி " என்றும் சொல்ல முடியாது.

"நீ கூடவருவது என் இன்பத்திற்கு இடைஞ்சல் " என்றும் சொல்ல முடியாது.

இராமன் நினைத்தது சீதை கானகத்தில் வந்து துன்பப்படக் கூடாதே என்று.

பெண்கள், எப்படி, அப்படியே ஒரு வாதத்தை மாற்றி விடுகிறார்கள்.

இதுக்கு மேலேயும் இராமன் நீ வராதே என்று எப்படி சொல்ல முடியும் ? 


பாடல்


கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?
என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள்.


பொருள்






கொற்றவன் = கொற்றவன் என்றால் அரசன் என்று பொருள் அல்ல. கொற்றவன் என்றால் வெற்றி பெற்றவன் என்று பொருள். அரசுதான் இல்லையே. அவன், அவள் மனதை வென்றவன், மக்கள் மனதை வென்றவன், தன்  புலன்களை வென்றவன், தன்  மனதை வென்றவன்...அதனால் கொற்றவன். கம்பன் ஒவ்வொரு வார்த்தையும் தெரிந்து எடுத்து போடுகிறான்.


அது கூறலும் = அப்படி சொன்னவுடன் (நீ இங்கேயே இருத்தி என்று )

கோகிலம் = குயில்

செற்றது அன்ன = கோபித்தது போல

குதலையள் = பொருள் தெரிந்து சொல் தெரியாமல் இருப்பது. குழந்தைகள் மழலை பேசும். அதுக்குத் தெரியும் என்ன சொல்ல வேண்டும் என்று...ஆனால் எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. வார்த்தைகள் தெரியாது. எப்படி ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும் என்ற இலக்கணம் தெரியாது. சத்தம் வரும். அர்த்தம் வராது. ஆனால், குழந்தை என்ன சொல்கிறது என்று தாய்க்கு தெரியும். அது அவர்களுக்குள் உள்ள பரிபாஷை. அது போல, சீதை பேசினால். பொருள் என்ன என்று  இராமனுக்கு மட்டும் தெரிந்தது. எனவே, குதலையள் .

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அன்பை, அன்யோன்யத்தை இதை விட எப்படி சொல்லுவது. அவள் மனதில் நினைப்பது, வார்த்தைகள் சரியாக வராவிட்டாலும், அவனுக்குப் புரிகிறது.

நான், சொல்வது,உங்களுக்குப் புரிகிறதா ?


சீறுவாள் = கோபித்தாள். குயில் போல் குரல். குழந்தை போல் மொழி. இதில் கோபம் வேற


'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே? = நான் கூட இருப்பது மட்டும் தான் துயரமா உனக்கு ?

இராமன் சொன்னது அவளுக்கு துன்பம் என்று. அதை அப்படியே திருப்பிப் போட்டு, நான் வருவது உனக்கு துன்பமா என்று கேட்கிறாள். பாவம் இராமன்.

என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள் = என்னை துறந்தபின் சந்தோஷமா இருப்பியா ? என்றாள்.

இப்படி ஒரு மனைவியை கூட்டிச் செல்வதும் கஷ்டம், விட்டு விட்டு செல்வதும் கஷ்டம்.

இராமன் நிலையை யோசித்துப் பாருங்கள்....


1 comment:

  1. நம்ம வீட்டிலே நடக்கிற சீன் மாதிரி இருக்கே! இப்படி ஒரு காட்சியைக் கண் முன்னால் கொண்டு வந்த கம்பர் "கவிச் சக்ரவர்த்தி" என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அடையாளம்.

    கொற்றவன்,குதலையள் - இந்த இரண்டு பதங்களுக்கும் உன் உரை சூப்பர். இந்த விளக்கம் இல்லாமல் இந்தப் பாடலைப் படித்தால் இது தோன்றி இருக்காது. ஒரு சிறப்பு நன்றி உனக்கு.

    ReplyDelete