Pages

Tuesday, April 30, 2013

புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்


புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய் 


நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.

அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?

எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்

பாடல்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


பொருள் 



இருங்கடல் = இருண்ட கடல். கரிய கடல். 

உடுத்த = அதை உடையாக உடுத்த 

இப் பெருங்கண் மாநிலம் = இந்த பெரிய மாநிலத்தில் 

உடை = ஒரு வகை மரம். 

இலை = அந்த உடை மரத்தின் இலை ...அது மிக மிக சிறியதாய் இருக்கும் 

நடுவணது = நடுவில் அது 

 இடைபிறர்க்கு இன்றித் = கொஞ்சம் இடம் இல்லாமல் 

தாமே ஆண்ட = தாமே ஆண்ட 

ஏமம் காவலர் = பாதுகாப்புடன் ஆண்ட அரசர்கள் 

இடுதிரை மணலினும் பலரே = இந்த கடல் மண்ணின் எண்ணிகையை விட அதிகம் 

சுடுபிணக் = பிணத்தை சுடுகின்ற 

காடு = காடு, சுடு காடு 

பதி யாகப் போகித் = அதிபதியாகி போய் 

 தத்தம்   = தங்களுடைய 

நாடு = நாடு 

பிறர் கொளச் = பிறர் கொள்ள 

சென்றுமாய்ந் தனரே = சென்று மடிந்தனர் 

(அதாவது, இந்த கடல் சூழ்ந்த உலகம் அத்தனையும், உடை மரத்தின் இலை அளவு கூட பிறருக்கு தரமால் ஆண்ட அரசர்கள் எல்லோரும் ஒரு நாள் தங்கள்  அரசை பிறர் கை பற்றிக் கொள்ள, இறந்து சுடுகாட்டிற்கு போனார்கள். அப்படி போனவர்களின் எண்ணிக்கை இந்த கடல் மணலின் எண்ணிக்கையை விட அதிகம் )

அதனால் நீயும் = அதனனல் நீயும் 

கேண்மதி = கேள் 
 
அத்தை = அசை சொல் 

வீயாது = விழாது 

உடம்பொடு நின்ற உயிரும் இல்லை = உடம்போடு நின்ற உயிரும் இல்லை 

மடங்கல் = இறப்பு 

உண்மை = உண்மையானது 

மாயமோ அன்றே = பொய் அன்று 

கள்ளி  ஏய்ந்த = கள்ளி செடிகள் நிறைந்த 

முள்ளியம் புறங்காட்டு = முட்கள் (?) நிறைந்த சுடுகாட்டில் 

வெள்ளில் போகிய = வெளி இடம் போக்கிய 

வியலுள் = அகன்ற இடத்தில் 

ஆங்கண் = அங்கு 

உப்பிலாஅ = உப்பு இல்லாத 

அவிப்புழுக்கல் = அவித்த புழுங்கல் (உணவு )

கைக்கொண்டு = கையில் கொண்டு  

பிறக்கு நோக்காது = சுற்றி இருப்பதை பார்க்காமல் 

இழி பிறப்பினோன் = இழிந்த பிறப்பை கொண்டவன் (சுடுகாட்டு வெட்டியான் )

ஈயப்பெற்று = பிச்சையாகப்  பெற்று 

நிலங்கல னாக = நிலத்தில் வைத்து 

விலங்குபலி = வேண்டாத உணவை  

மிசையும் = உண்ணும் 

இன்னா வைகல் = பொல்லாத நாள் 

 வாரா முன்னே = வருவதற்கு முன் 

செய்ந் நீ = நீ செய்வாயாக 

 முன்னிய வினையே = நினைத்த வினைகளை 

முந்நீர் வரைப்பகம் = மூன்று நீர் (ஆற்று, ஊற்று நீர், மழை நீர்) சேர்ந்த இக்கடல் சூழ்ந்த உலகை 

முழுதுடன் துறந்தே = முழுதும் துறந்தே 

இந்த உலகத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்காதே. இதை விடு. நீ நினைத்ததை செய். 

1 comment:

  1. அப்பா... ரொம்ப வீரியமான பாடல். சொல்லும் செய்தியை அழுத்தமாகச் சொல்கிறது.

    ஒரே ஒரு கேள்வி: வெட்டியான் கொடுக்ப்பதை சாப்பிடுவதாக எழுதியது என்ன அர்த்தம்?

    ReplyDelete