அபிராமி அந்தாதி - மெலிகின்ற மெல் இடை
பெண்களின் இடைக்கு மின்னலை உதாரணம் கூறுவது வழக்கம். அந்த மின்னலை விட மெலிந்த இடை உள்ளவள் அபிராமி.
நீண்ட கரிய வானில் ஒரு கணத்திற்கும் குறைவான நேரம் தோன்றி மறையும் மின்னலை விட மெலிந்த இடை. இருந்ததோ இல்லையோ என்று சந்தேகப் படும்படி தோன்றி மறையும் மின்னல். அது போல இடை உள்ளவள் எங்கள் அபிராமி.
அவளுடைய கணவன், அவனுக்கு ஏதேனும் ஒரு குறை என்றால் அவளுடைய பாதத்தை அணைத்து தன் தலைமேல் வைத்துக் கொள்வான். அவள் பாதம் உள்ள வரை என்ன கவலை?
சிவனுக்கே ஒரு குறை என்றால் அவள் பாதமே சரண் என்று அவளை அடைகிறான்.
அப்படி என்றால் நான் எம்மாத்திரம் ? எனக்கும் உன் பாதமே கதி என்று சரண் அடைந்து விட்டேன். இனி மேல் நான் மறுபடி பிறந்தால் அது அபிராமி உன் குறையே அன்றி என் குறை அல்ல. என்னை பிறவாமல் காப்பது உன் கடனே
பாடல்
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே
பொருள்
என் குறை தீர = என்னுடைய குறை தீர
நின்று = அவசரப் படாமல், நின்று நிதானமாக, பொறுமையாக. இந்த நின்று என்ற வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. நிற்க அதற்க்கு தக என்றார் வள்ளுவர். நிற்பது என்றால் வழியில்செல்லுவது . அறிந்து, புரிந்து, அந்த வழியில் செல்வது. நடையில் நின்று உயர் நாயகன் என்று இராமனை சொல்வார் கம்பர்.
ஏத்துகின்றேன் = உன்னை புகழ்கின்றேன்
இனி யான் பிறக்கின் = இனி நான் பிறந்தால்
நின் குறையே அன்றி = உன்னுடைய குறையே அன்றி
யார் குறை = யாருடைய குறை ?
காண் = காண்கின்ற
இரு நீள் விசும்பின் = இருண்ட நீண்ட வானில்
மின் குறை காட்டி = மின்னலை ஒரு குறையாக காட்டி
மெலிகின்ற = நாளும் மெலிகின்ற
நேரிடை = நேர்த்தியான, நேரான
மெல்லியலாள் = மென்மையானவளே
தன் குறை தீர = தன்னுடைய குறை தீர
எம் கோன் = எங்களின் தலைவன்
சடை மேல் = சடை மேல், அதாவது தலை மேல்
வைத்த தாமரையே = வைத்த தாமரையான பாதங்களே
No comments:
Post a Comment