தேவாரம் - பெண்ணோடு தனிமையில் பேச
மனைவியிடம் கொஞ்சம் தனியாக பேச என்றால், அக்கம் பக்கம் யாரும் இருக்கக் கூடாது.அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் மென்மையாக பேச முடியும்.
அது அப்படி இருக்கட்டும்.
அது ஒரு அழகிய கிராமம். ஊருக்கு வெளியே சில மலைகள். அந்த மலைகைளில் இருந்து அருவி நீர் விழுகிறது. அது விழும் போது வரும் வழியில் சில பல மரங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த அருவியில் நீர் திவலைகள் தெறிக்கும் போது, அதில் ஒளி பட்டு அது முத்து பவளம் போல ஜொலிக்கிறது.
அது ஊரு நிலவரம்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
மனைவியை கட்டி அணைக்க வரும்போது இன்னொரு பெண்ணையும் கூடவே கூட்டி வந்து இருக்கிறார். பத்தா குறைக்கு கழுத்தில கைல சத்தம் போடும் ஆபரணம் வேற.
இதை எல்லாம் வைத்துக் கொண்டா மனைவியை கட்டி அணைப்பார்கள் ?
என்று சிவனை பார்த்து கேட்க்கிறார் ஞான சம்பந்தர்.....
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனலுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
பொருள்
மரவஞ்சிலை = சிலை என்றால் ஒரு வித மரம். வெண்மையான கடம்ப மரம்,
தரளம் = முத்து மணி போன்ற நவ மணிகள்
மிகு = மிகுந்த
மணியுந்து = அது போன்ற மணிகளை உந்தித் தள்ளும்
வெள் ளருவி = வெண்மையான அருவி
அரவஞ் = சத்தம்
செய = செய்ய
முரவம்படும் அண்ணாமலை = முழக்கம் செய்யும் அண்ணாமலை
யண்ணல் = அண்ணல்
உரவஞ் = உரகம், பாம்பு
சடை யுலவும் = சடையில் உலவும்
புனலுடனாவது மோரார் = புனல் + உடனாவதும் + ஓரார் = புனலான கங்கை தலையில் இருப்பதை சிந்திக்க மாட்டார்
குரவங்கமழ் = குரா என்ற பூவின் வாசனை கமழும்
நறு = நல்ல
மென்குழல் = மென்மையான குழலை உடைய
உமை = உமாதேவியை
புல்குதல் = கட்டி அணைத்தல்
குணமே. = குணமே. அவர் குணமே அப்படித்தான்
இன்னொரு பெண்ணை மட்டுமா, பாம்பையும் அல்லவே உடன் வைத்திருக்கிறார்!
ReplyDeleteபுன்முறுவல் பாடல்!