கம்ப இராமாயணம் - உயிர் உமிழா நின்றாள்
இராமன் தான் மட்டும் கானகம் போகிறேன், நீ இங்கேயே இரு என்று சீதையிடம் கூறுகிறான்.
சீதைக்கு வருத்தம் தாங்கவில்லை. கானகம் போக வேண்டுமே என்று அல்ல, தன்னை இங்கேயே இரு என்று சொல்லிவிட்டானே என்று.
பாற்கடலில் இருந்து அயோத்தி வரை ஒன்றாக வந்து விட்டேன், இதோ இருக்கிறது கானகம் அங்கே வரமாட்டேனா என்று வருந்துகிறாள் ?
அவங்க அப்பா அம்மா சொன்னதை கேட்டு கானகம் போகத் துணிந்தது நல்ல காரியம்தான்...என்னை என்னை ஏன் இங்கேயே இரு என்று சொன்னான் என்று நினைத்து நினைத்து உயிரை வெளியே துப்பி விடாமல் இருந்தாள்....
வாயில் போட்டவுடன், ரொம்ப கசந்தது என்றால் உடனே துப்பி விடுவோம்...இராமன் அப்படி சொன்னவுடன், அவளுக்கு தன் உயிரே கசந்து விட்டதாம்....உமிழ்ந்திருக்க வேண்டும்...அப்படி செய்யவில்லை....மெல்லவும் முடியவில்லை...விழுங்கவும் முடியவில்லை...அப்படி ஒரு சங்கடம்....
பாடல்
அன்ன தன்மையள், 'ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள்.
பொருள்
அன்ன தன்மையள், = அப்படிப்பட்ட தன்மை உள்ள சீதை
'ஐயனும், அன்னையும் = தசரதனும், கைகேயியும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே = சொன்னதை செய்ய துணிந்தது நல்லதே
என்னை, என்னை, = என்னை, என்னை போய் ...இரண்டு முறை என்னை என்னை சொன்னது ஒரு இனிமை
"இருத்தி" என்றான்?' = இங்கேயே இரு என்று சொல்லிவிட்டானே
எனா, = என்று
உன்ன, உன்ன = நினைத்து நினைத்து
உயிர் உமிழா நின்றாள் = உயிரை வைத்துக் கொள்ளவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்தாள்
இராமன் கூட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று சொல்லி விட்டான்....
சீதை கடைசியில் ஒரு பிரமாஸ்திரத்தை விடுகிறாள்...வேறு வழியில்லாமல் இராமன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்....
அந்த பிரம்மாஸ்திரம்....
குழந்தைகள் ஒரு துக்கத்தை எண்ணி எண்ணி, மீண்டும் மீண்டும் அழுவது போல, "உன்ன உன்ன" உமிழா நின்றாளாம்! என்ன அருமையான சொற்கட்டு!
ReplyDelete