இராமாயணம் - எல்லாம் பார்வையில் இருக்கிறது
இந்த உலகமும் அதில் நடக்கும் செயல்களும் அவற்றின் விளைவுகளும் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.
துன்பம் என்று நினைத்தால் துன்பம். இன்பம் என்று நினைத்தால் இன்பம்.
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே என்பார் நாவுக்கரசர். இந்த உலகம் நாம் பண்ணியது. இன்பமோ , துன்பமோ உங்களை சுற்றியுள்ள உலகம் நீங்கள் பண்ணியது. (பாவம் இயற்கையாக வருவது அல்ல, நாம் கற்றுக் கொள்கிறோம். பயின்ற பாவம்.... இந்தப் பாடல் நமச்சிவாய பதிகம் என்ற தொகுதியில் உள்ளது. நேரம் இருப்பின், அது பற்றி பின்னர் சிந்திப்போம்).
இதெல்லாம் சொல்ல நல்லாத்தான் இருக்கு, நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம்.
இராமனின் வாழ்க்கையில் இருந்து ஒரு காட்சி....எப்படி ஒரு நிகழ்வு ஒருவருக்குத் துன்பகமாகத் தெரிகிறது, இன்னொருவருக்கு இன்பமாகத் தெரிகிறது....
கைகேயி இராமனை கானகம் போகச் சொல்லுகிறாள்....கைகேயியை பொருத்தவரை கானகம் என்பது துன்பம் நிறைந்த இடம். புழுதி படிந்த இடம். சுத்தம் இல்லாத இடம். சேரும் சகதியும் நிறைந்த இடம். அந்த காட்டுக்குப் போ என்றாள்.
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள்
பூழி என்றால் துகள். புழுதி என்ற சொல் அதில் இருந்து வந்தது. பூழி புனைந்தவர் என்று கந்த புராணம் விபூதி அணிந்தவர்களை பற்றி பேசும். பூழி என்ற சொல்லுக்கு சேறு, சகதி என்றும் ஒரு பொருள் உண்டு.
காடு என்பது புழுதி படிந்தது, சேறும் சகதியும் நிறைந்தது. அது மட்டும் அல்ல.
அது வெம்மையானது. சூடு மட்டும் அல்ல, வாழத் தகுதி இல்லாத இடம் என்ற பொருளும் உண்டு.
அப்படிப் பட்ட பூழி வெங் கானம் நண்ணி என்றாள் கைகேயி.
அந்த கானகம் இராமனுக்கு எப்படி தெரிகிறது தெரியுமா ?
மின்னலைப் போல் ஒளி வீசும் கானகமாகத் தெரிகிறது.
ஒளி பொருந்திய கானகம். சூரிய ஒளியாக இருக்க முடியாது. வேறு என்ன ஒளி. முனிவர்களும், அறிவு தாகம் கொண்ட ஞானிகளும் இருக்கும் இடம் கானகம். அவர்களை கண்டு பேசி அறிவொளி பெறலாம்.
அங்கே முனிவர்கள் யாகம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த இருண்ட கானகத்தில் அங்கும் இங்கும் மின்னல் போல் அந்த யாகத் தீ தெரியும். இராமனுக்கு அது மின்னொளி கானகமாகத் தெரிகிறது .
'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.'
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் என்றான்.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும் அதில் என்ன நன்மை இருக்கிறது என்று ஆராய்ந்து அதில் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் நமக்கு வேண்டாத, விருப்பம் இல்லாத நிகழ்வுகள் நிறைய வரும். அதனால் உண்டைந்து போய் விடாமல், கிடைத்ததில் இருந்து என்ன நன்மை அடையலாம் என்று பார்க்க வேண்டும்..
காட்டுக்குப் போ என்றால் உடனே ஆஹா மின்னொளிர் கானகம் என்று சந்தோஷமாகப் புறப்பட்டான் இராமன்.
இது ஒரு உயர்ந்த பாடம் அல்லவா. உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும். கதை போல் சொல்லி வையுங்கள். என்றேனும் அவர்கள் வாழ்வில் இது பயன்படும்.
மின்னொளிர் கானகம் அளவுக்கு நமக்கு maturity வராவிட்டாலும் நமக்கு மட்டும் தான் இவ்வளவு துன்பம் என்று self pity இல்லாமல் வாழ்க்கையை பார்க்க இந்த மாதிரி பாடல்கள் உதவுகிறது. வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான விஷயம் இது. நன்றி
ReplyDeleteகாடு ஒரு கொடுமையான இடம் என்று கைகேயி எண்ணினால், ஏன் "புண்ணியத் துறைகள் ஆடி" என்று சொல்கிறாள்? தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் ஆடினால், இராமனுக்கு நன்மை என்று அவள் எண்ணியிருந்தால், அதை குறிப்பிட்டிருக்க மாட்டாளே?!
ReplyDelete"மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பேனோ?" ஆகா, என்ன ஒரு வரி இது! "இன்னா செய்தாரை ஒறுத்தல்" என்பது போல, இதைக் கேட்டதும் கைகேயி எவ்வளவு நாணியிருக்கவேண்டும்! ஒருவேளை அதுதான் இராமன் கருத்தோ என்னவோ?
"மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பேனோ?" மிக அருமையான வரி. அடுத்த blogல் இந்த வரிக்கு உங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கலாமா ?
ReplyDelete