Pages

Monday, May 27, 2013

இரணியன் வதம் - இரணியன் சிறப்பு

இரணியன் வதம்  - இரணியன் சிறப்பு 


இரணியன் எப்பேர்ப்பட்டவன் என்று சொல்ல வேண்டும். கம்பன் கவி விளையாடுகிறது. நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கம்பனின் கற்பனை விரிகிறது.

ஒருவன் மிக பல சாலி என்று சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவீர்கள் ? யோசித்து பாருங்கள் ? நீங்கள் எவ்வளவு தான் அதீதமாக யோசித்தாலும், கம்பன் உங்கள் கற்பனையை பூ என்று ஊதி தள்ளி விடுவான்.


ஒரே ஒரு பாடலை மாதிரிக்கு தருகிறேன்.

திசைகளை காக்கும் யானைகளில் இரண்டை தன் இரண்டு கைகளால் எடுத்து ஒன்றோடொன்று மோதுவான். ஆழம் காண முடியாத ஏழு கடல்களும் அவன் கணுக்கால் அளவு தான் இருக்கும். ஏதோ தரையில் நடந்து போவதைப் போல இந்த கடல்களின் நடுவில் நடந்து போவான்.

பாடல்

'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக் கைப்
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்.

பொருள் 





பாழி வன் தடந் திசை = அகன்ற, வலிய, பெரிய திசைகளை

சுமந்து ஓங்கிய = சுமந்து ஓங்கிய

பணைக் கைப் = பருத்த கைகள் (தும்பிக்கை)

பூழை = துளை உள்ள

வன் கரி = பலம் பொருந்திய யானைகள்

இரண்டு இரு கைக்கொடு பொருத்தும் = இரண்டு கைகளால் எடுத்து அப்பளத்தை  நொறுக்குவதை போல நொறுக்குவான் (பொருத்தும்);

ஆழம் காணுதற்கு அரியவாய் = ஆழம் காண முடியாத

அகன்ற பேர் ஆழி = அகன்ற பெரிய கடல்

ஏழும் = ஏழும்

 தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்= அவன் பாத அளவு என நினைத்து நடந்து போவான். ஏழு கடல் அவன் கணுக்கால் அளவு என்றால் கால் எவ்வளவு பெரிசு. கால் அவ்வளவு பெரிசு என்றால் ஆள் எவ்வளவு ஆளாக இருக்க வேண்டும் ....

 மிகையான கற்பனை தான் என்றாலும் சுவையான கற்பனை.


2 comments:

  1. என்ன ஒரு கற்பனை. thanks for giving such nice poems for us.

    ReplyDelete
  2. இதற்கு முன்பு கூட எங்கோ யானையை அடிப்பதைப் பற்றிப் படித்த நினைவு இருக்கிறது. பாவம், இந்த யானைகள் என்ன செய்தனவோ!

    அருமையான கற்பனை நயம்.

    தந்ததற்கு நன்றி.

    ReplyDelete