Pages

Thursday, May 23, 2013

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம்

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம் 


வாலியின் மேல் அம்பு எய்த பின், இராமன் வாலியின் முன் வந்து  நின்றான் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

வாலிக்கும் இராமனுக்கும் வாக்கு வாதம் நிகழ்கிறது.

வாலி கேட்ட கேள்விக்கு எல்லாம் இராமன் பதில் சொல்கிறான் - கடைசி ஒரு கேள்வியைத் தவிர.

கடைசியில் வாலி கேட்க்கிறான் - ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் ? என்று.

அந்த கேள்விக்கு இராமன் பதில் சொல்லவில்லை.

இலக்குவன் பதில் சொல்கிறான்.

உன் தம்பி சுக்ரீவன் அடைக்கலம் அடைந்து விட்டான்...நீயும் சரண் என்று வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தான் என்று சொல்கிறான்.



முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 



மறைந்து நின்று அம்பு எய்ததில் சந்தேகம் ஒன்றும் இல்லை. இலக்குவனே அதற்கு வாக்கு மூலம் அளிக்கிறான்.

நீயும் வந்து "அடைக்கலம் யானும்" என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கருதி  அண்ணல் மறைந்து நின்று அம்பு எய்தான் என்று கூறுகிறான்.

இது ஏற்புடையதா ?

சரணாகதியில் இவனை ஏற்ப்பேன், இவனை ஏற்க மாட்டேன் என்று சொல்லுவது  சரியா ?

இராவணனே வந்தாலும் அபயம் அளிப்பேன் என்று சொல்லியவன் இராமன். வாலிக்கு  அபயம் அளித்தால் என்ன ?

இப்போது இராமன் என்ன செய்யப் போகிறான் என்பதுதான் கேள்வி.

இராமன் இரண்டு விஷயங்கள் செய்தான்.

ஒன்று செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்...யாரிடம் ? வாலியிடம் கூட அல்ல, வாலியின் மகன், பொடியன் அங்கதனிடம் இராமன் மன்னிப்பு கேட்டான்.

ஹா...அப்படியா சங்கதி...இதுதான் இராமன் காட்டிய வழியா...தவறு செய்தால் மன்னிப்பு கேட்டால் போதுமா ? ரொம்ப சுலபமான வழியாக இருக்கிறதே என்று  நீங்கள் ஆரம்பிக்கு முன்....

நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். போகும் போது ஒரு மிதிவண்டி காரன் குறுக்கே வந்து விடுகிறான். அவனை இடித்து விடக்கூடாதே என்று வேகமாக வண்டியை வளைக்கிறீர்கள் ....ஓரமாய் ஒழுங்காக நடை பாதையில் சென்று கொண்டிருந்தவன் மேல் வண்டியை மோதி விடுகிறீர்கள்.

நடை பாதையில் போகிறவனை கொல்வது உங்கள் நோக்கம் அல்ல. மிதி வண்டி காரனை காப்பாற்ற நினைத்தீர்கள்...

வாலியை கொல்ல வேண்டும் என்று இராமன் அயோத்தியை விட்டு கிளம்பவில்லை. சுக்ரீவனை காப்பாற்ற நினைத்தான், வாலி அடி பட்டான்.

இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போகக் கூடாது - முதல் விதி. 

நடை பாதையில் சென்று அடிபட்டவனிடம் மன்னிப்பு கேட்கிறான் - இது இரண்டாவது விதி.

இதோடு விட்டிருந்தால், பெரிய விஷயம் இல்லை.

மூன்றாவதாக இராமன் ஒரு காரியம் செய்கிறான். யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு காரியம்.

தவறுக்கு பிரயாச்சித்தம் செய்கிறான்.

அந்த நேரத்தில், இராமனுக்கு பிள்ளை இல்லை. வாரிசு இல்லை. வாலியின் மகனை தன்  வாரிசாக  ஏற்றுக் கொள்கிறான்.

தன் உடைவாளை அங்கதனிடம் கொடுத்து, " நீ இதை பொறுத்தி " என்றான். பொறுத்தி என்றால் பெற்றுக் கொள் என்று அர்த்தம் அல்ல. இதற்க்கு முன்னால் இராமனை காட்டுக்கு அனுப்பமாட்டேன் என்று தசரதன் சொன்ன போது , விச்வாமித்ரன் கோபம் கொண்டபோது, வசிட்டன் " நீ இதை பொறுத்தி " என்கிறான். மன்னித்துக் கொள் என்ற அர்த்தத்தில் தான் கம்பன் அந்த வார்த்தையை கையாளுகிறான்.

தான் செய்த தவறுக்கு, இராமன் செய்த பிரயாசித்தம் அது.

அவன் அப்படி செய்ததும், உலகம் எல்லாம் அவனை வாழ்த்தியது.

வெறும் மன்னிப்பு அல்ல.  கொஞ்சம் செல்வத்தை கொடுத்து சரி   பண்ண முயற்சி செய்யவில்லை. வாலியின் மகனை தன் மகனாக அங்கீகாரம் செய்கிறான்.

இது ஏதோ அந்த நேரத்து உணர்ச்சியில் செய்யவில்லை.

இராமனிடமே இராஜ்ஜியம் இல்லை. இதில் அங்கதனை வாரிசாக அறிவித்த் என்ன பயன் ?


பின்னால் இராவண வாதம் முடிந்து, முடி சூட்டிக் கொள்ளும் போதும் " அங்கதன் உடை வாள் ஏந்த" என்று அந்த இடத்திலும் தன் அரசின் வாரிசாக அறிவிக்கிறான் இராமன்.

 தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்

முதலில், ஓடி ஒளியாமல் தவறு இழைக்கப் பட்டவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

இரண்டாவது - தவறுக்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும்

மூன்றாவது - தவறுக்கு பிரயாசித்தம்  தேட வேண்டும்.

 நான்காவது - அந்த தவறில் இருந்து பாடம் படிக்க வேண்டும். மீண்டும் அந்த தவறு  நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்காவது விஷயம் எப்ப நடந்தது என்று நாளை பார்ப்போம் ....

இன்றைய பாடல்


தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,

பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்


பொருள்






தன் அடி தாழ்தலோடும் = தன் திருவடிகளில் வீழ்ந்த அங்கதனை

தாமரைத் தடங் கணானும் =  தாமரை போன்ற பெரிய கண்களை உடைய இராமன்

பொன் உடைவாளை நீட்டி =  பொன்னாலான தன் உடைவாளை நீட்டி


 'நீ இது பொறுத்தி' என்றான் = நீ இதை பொறுத்துக் கொள் என்றான்

என்னலும் = அப்படி சொன்னவுடன்

உலகம் ஏழும் ஏத்தின = உலகம் ஏழும் அவனை போற்றின

 இறந்து = இறந்து

 வாலி = வாலி

அந் நிலை துறந்து = பூஉலக வாழ்வை துறந்து

 வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான் = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்திற்கு போனான். வானுலகம் சரி. அது என்ன வானுக்கு அப்புறம் உள்ள உலகம் ?  அதையும் பின்னொரு நாள் திருக்குறளோடு சேர்த்து பார்ப்போம்.




3 comments:

  1. உடைவாளைக் கொடுத்தால், மகன் என்று ஏற்றுக்கொள்வதாகுமா?

    ஆக மொத்தம், இராமன் செய்தது தவறு என்பதே கம்பராமாயத்தின் முடிவு போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாளுக்கு மாலை இட்டால், அந்த வாளுக்கு உரியவனுக்கு மாலை இட்ட மாதிரி.
      அரசனின் வாள் என்பது அவனின் அதிகாரம். அந்த வாளை வைத்திருப்பவன் அரசனின் அத்தனை அதிகாரத்தையும் பெற்றிருக்கிறான். அந்த வாளுக்கு தரும் மரியாதை அரசனுக்குத் தரும் மரியாதை.

      இராமன் தவறு செய்தான் என்று சொல்லுவதில் ஒரு மகிழ்ச்சி. Everybody like the hero to fall என்று சொல்லுவார்களே அது மாதிரி.

      என்னை பொருத்தவரை - செய்தது தவறுதான். ஆனால் அந்த தவறுக்கு பிறகு அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதுதான் எனக்கு முக்கியம். அதில் ஏதேனும் பாடம் இருக்கிறதா ? அந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் ஏதாவது அறிந்து நம்மை முன்னேற்றிக் கொள்ள முடியுமா என்றால் - முடியும் என்பது என் கருத்து.

      Delete
    2. என் வாதம் என்ன என்றால் தவறு செய்து தான் பாடம் சொல்ல வேண்டும் என்று இல்லை.

      Delete