இராமாயணம் - நீள் கரம் பற்றிய கையினள்
இராமன் கனகம் போவேன் என்று சொன்னவுடன் நானும் உன்னுடன் வருவேன் என்று சீதை வாக்குவாதம் பண்ணுகிறாள். நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம் என்று கேள்வி கேட்கிறாள். என்னை விட்டு விட்டு போவதுதான் உனக்கு இன்பமா என்று இராமனை மடக்குகிறாள்.
இராமன் யோசிக்கிறான்.
சீதை பார்த்தாள். இது சரி வராது என்று நேரே அரண்மனையின் உள்ளே போனாள் . தான் உடுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை களைந்தாள் . மர உரியை புனைந்தாள் . இராமனுக்கு பின் வந்து நின்று, அவன் கையை பற்றிக் கொண்டு "வா போகலாம்" என்று சொல்லுவதை போல நின்றாள்.
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், மனைவி "நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற சொன்னால் அந்த அன்பு, அந்த காதல் ஒரு ஆண்மகனை எந்த துன்பத்தையும் எதிர்த்து போராடும் ஆற்றலை தரும்.
நினைத்துப் பாருங்கள். சீதை, எப்படி வாழ்ந்தவள். ஜனகனின் ஒரே பெண். எவ்வளவு செல்லமாக வாழ்திருப்பாள். பட்டத்து இராணியாக வேண்டியவள்.
எல்லாவற்றையும் விடுத்து, மர உரி அணிந்து வந்து நின்றாள் என்றால் அவள் இராமன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்.
அவள் அந்த அளவு தன் மேல் அன்பு செய்ய இராமனும் எப்படி இருந்திருக்க வேண்டும் ?
கண்ணில் நீர் வர வைக்கும் அந்த பாடல்
அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.
பொருள்
அனைய வேலை = அந்த நேரத்தில்
அகல்மனை எய்தினள் = விட்டு விட்டு போகக் கூடிய வீட்டினை (இங்கே அரண்மனை) அடைந்தாள். விட்டுப் போவதற்கு முன்னே, "அகல் மனை " என்று கூறுகிறான் கம்பன்
புனையும் சீரம் = சீரம் என்றால் மரப் பட்டையையில் இருந்து செய்த ஆடை. அல்லது ஆடையாய் உடுத்தும் மரப் பட்டை.
துணிந்து புனைந்தனள் = இதுதான் சரியான முடிவு என்று உறுதி செய்து பின், புனைந்தாள், (=உடுத்தினாள் )
நினையும் வள்ளல் = என்ன ஒரு வார்த்தை! நினையும் வள்ளல். அவள் நினைக்கும் வள்ளல். அவளையே நினைக்கும் வள்ளல். இப்படித்தான் நடக்கும் என்று நினைத்த வள்ளல். மற்றவர்கள் (பக்தர்கள்) கேட்காமலே, தானே அவர்களுக்கு எது நல்லது என்று நினைந்து தரும் வள்ளல். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்க வாசகர் சொன்னது போல், நினையும் வள்ளல் இராமன். வள்ளல் என்றால் அளவு இல்லாமல் கொடுப்பவன். கொடுப்பதற்கு பதிலாக வேறு எதையும் எதிர் பாராமல் கொடுப்பவன். கொடுப்பதில் மகிழ்ச்சி அடைபவன்
இராமனிடம் அரசு இல்லை. கையில் ஒன்றும் இல்லை. இருந்தும் அவனை வள்ளல் என்கிறான் கம்பன். கொடுப்பதற்கு பணம் வேண்டாம்...மனம் வேண்டும். அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை.
இராஜ்ஜியம் இல்லாவிட்டால் என்ன. அவனால் அன்பைத் தர முடியும், அருளைத் தர முடியும். அதை விடவா பொருள் பெரிது.
(இன்னொரு இடத்தில் இராமனை வள்ளல் என்றார் கம்பர் ...அதை பின்பொருநாள் பார்ப்போம் )
நினையும் வள்ளல்.
பின் வந்து = அவன் பின்னே வந்து
அயல் நின்றனள் = பக்கத்தில் நின்றாள்
பனையின் நீள்கரம் = பனை போன்ற நீண்ட இராமனின் கையை
பற்றிய கையினாள் = பற்றிய கையினாள். இராமனின் கையை பற்றிய சீதை.
வா, போகலாம் என்று அவன் கையை பற்றிக் கொண்டு நின்றாள்.
அரசை துறப்பதோ, கானகம் போவதோ அவளுக்கு பெரிய ஒன்றாகத் தெரியவில்லை. இராமன் கூட இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
சீதையின் அன்பை நினைத்து நெகிழ்வதா ?
இராமனின் ஆளுமையை நினைத்து நெகிழ்வதா ?
அந்த இரண்டையும் துல்லியமாக கவியில் வடித்த கம்பனின் கவித் திறமையை நினைத்து நெகிழ்வதா ?
தமிழ் தெரிந்ததற்காக இன்னும் ஒருமுறை சந்தோஷப் பட்டுக் கொள்ளுங்கள்.
அருமையான பாடல். அற்புதமான காட்சியை வடித்துக் கொடுத்திருக்கிறது.
ReplyDelete(ஆமாம், அரண்மனையில் எதற்கு மரவுரி வைத்திருக்கிறார்கள்?!)
கோசலை நாடுடை வள்ளல்? correct aa?
ReplyDeleteHow he owns Kosalai naadu ?
Deleteகோசலை நாடு தாய் வழி சொத்து என்று உங்கள் பிளாக்ல் படித்ததாக ஞாபகம்
ReplyDeleteவிபீஷணனின் சரணாகதிக்கு பின், அவனுக்கு ஸ்ரீ ராமன் லங்கா அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். அப்போது ஒரு சந்தேகம். ஒருவேளை ராவணனே வந்து சரணாகதி பண்ணினால், அவனுக்கு எந்த நாட்டை கொடுப்பது? ( சுக்ரீவனை அனுப்பி விபீஷணனை கூட்டி வரச்சொல்லும் போது ஸ்ரீ ராமன் சொல்கிறார், ‘சுக்ரீவா, விபீஷணனை கூட்டி வரும்போது, அவனுக்குப் பின்னால் பார்; ஒருவேளை ராவணன் வந்திருந்தாலும் அவனையும் கூட்டி வா’ என்று- இடையில் இது ஒரு தனிச்சுவை, வால்மீகி ராமாயணத்தில்)
ReplyDeleteராவணனுக்கு அயோத்தியை கொடுக்கலாம். ஆனால் அது பரதன் ஆட்சியில் உள்ளது. தவிர லக்ஷ்மணன், சத்ருக்னனுக்கும் சொந்தம். மிதிலையும் தமக்கு வந்து சேரவில்லை. என்ன பண்ணுவது? அப்போது தோன்றியது ராமனுக்கு, கோசலை நாட்டின் அரசனுக்கு கைகேயி ஒரே பெண்ணாகையால், அது அவள் மூலம் பரதனுக்குத்தான் வரும். நான் சொன்னால் பரதன் எதையும் மறுக்க மாட்டான்; எனவே ராவணனுக்கு கோசலை நாட்டை கொடுத்து விடலாம்’ என்று. அப்படி ஒரு நம்பிக்கை பரதன் பேரில்.
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
இங்கும், ‘வள்ளல்’ என்பதிற்கு பதிலாக அரசன், தலைவன் போன்ற ஏதோவொரு சொல்லை உபயோகத்திருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராமன் நாட்டினை தருவதிற்கு தயாராய் உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே ‘வள்ளல்’ என்பதை உபயோகிக்கிறார் போலிருக்கிறது.
இதிகாசம் என்றால் படிக்கப் படிக்க புதிய புதிய அர்த்தங்களை காண்பிப்பது என்பதும் ஒரு அர்த்தம்.