Pages

Wednesday, May 8, 2013

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


பக்தி செய்வது எளிதான காரியம் என்று நினைகிறீர்களா?

ரொம்பவும் கடினமான காரியம்.

நாளை முதல் பக்தி செய்யப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மட்டும் போதாது.

நாளை முதல் படிக்கப் போகிறேன், நாளை முதல் உடற் பயிற்சி செய்யப் போகிறேன், நாளை முதல் இசை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அதில் வெற்றியும் பெறலாம்.

பக்தி, தவம் இவை எல்லாம் உங்கள் பிரயத்னம் மட்டும் அல்ல.

குருவருளும் திருவருளும் இல்லாமல் முடியாது.

முன்பு செய்த தவமும் வேண்டும்.

நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்கிறார்


தவமும் தவமுடையார்க் காகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.


முன்பு தவம் செய்தவர்களுக்கே தவம் கை வரும். மற்றவர்கள் அதை செய்ய நினைப்பது அவமே என்கிறார்.

மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் தெரியுமா - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - என்பார்

இறைவன் திருவடியை வணங்க வேண்டும் என்றால், அவன் அருள் வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் பக்தியும் வராது.

பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை என்பார் அருணகிரிநாதர்.

தவம் நாம் செய்வது. பேறு முன்பு செய்த பாவ புண்ணியம். பூர்விக சொத்து.
முன்பு புண்ணியம் செய்திருந்தால், இப்ப தவம் செய்ய, பக்தி செய்ய முடியும்.

....தானமும் தவமும் செய்தல் அரிது ... என்பாள் ஔவை பாட்டி. தவம் செய்வது, பக்தி செய்வது எளிதான காரியம் அல்ல.



பாடல்:


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.



பொருள்







கண்ணியது உன் புகழ் = பாடி பரவியது உன் புகழை

கற்பது உன் நாமம் = நான் கற்பது உன் நாமம். இறைவன் நாமத்தை திருப்பி திருப்பி கிளிப் பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. கற்க வேண்டும். அதில் ஏதோ ஒன்று இருக்கிறது. இராமா இராமா என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. அவன் சொன்னது, செய்யது, அவற்றை கற்க வேண்டும் என்பார் ஆழ்வார் ....



கற்பார் இராம பிரானையல் லால்மற்றும் கற்பரோ?,

புற்பா முதலாப் புல்லெறும் பாதியன் றின்றியே,

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,

நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. (3381)



கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் = நான், காதலாகி கசிந்து பக்தி செலுத்தியது உன் திருவடிகளில்


பகல் இரவா நண்ணியது உன்னை = இரவு பகலாக நான் விரும்பி வந்தது உன்னிடம்


 நயந்தோர் அவையத்து = இந்த உலகில்

நான் முன்செய்த = நான் முன்பு செய்த

புண்ணியம் ஏது? = புண்ணியம் ஏது

என் அம்மே = என் தாயே

 புவி ஏழையும் பூத்தவளே = புவி ஏழையும் பூத்தவளே


1 comment:

  1. இந்த starting condition மிகவும் கடினமாக இருக்கிறதே. இறைவன் அருள் இல்லை என்றால், அவனை வணங்க மாட்டோம்; ஆனால் அவனை வணங்கவில்லை என்றால் அருள் கிடைக்காது!!!

    ReplyDelete