Pages

Saturday, June 1, 2013

இரணியன் வதம் - சொல்லாமல் சொன்னது

இரணியன் வதம்  - சொல்லாமல் சொன்னது 



நரசிங்கத்தின் உக்கிரமான அழகை சொல்லி முடியவில்லை கம்பனுக்கு. மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே போகிறான். என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அவனுக்கு.

கம்பனுக்கு நெஞ்சு விம்முகிறது. மூச்சு முட்டுகிறது. வார்த்தைகள் கை கட்டி வாய் மூடி சேவகம் செய்யும் கம்பனுக்கே நரசிமத்தை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.

"அம்மா" என்று  அரற்றுகிறான்.

தான் காணாத, தனக்குத் தெரியாத ஒன்றை சொல்லி அதுக்கும் மேலே என்று சொல்லுகிறான். மொத்தத்தில் ஒரு உன்மத்தம் பிடித்தவன் போல ஆகி விட்டான்.

உலகின் முடிவில் ஊழித் தீ என்று ஒன்று வரும்.. அது எல்லாவறையும் எரித்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை.

அந்த ஊழித் தீயை அவித்து  விடும் அளவிற்கு உக்கிரமாய் அந்த நரசிம்மம் தோன்றியது. அந்த ஊழித் தீயை தூண்டும் ஊழிக் காற்று. அந்த காற்றையும் மாற்றி போடும் அளவிற்கு ஆக்ரோஷமாய் நரசிம்மம் வந்தது.  

பாடல்

'முடங்கு வால் உளை அவ் அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெங் காலச் செந் தீஅதனை வந்து  அவிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பும், மற்று அக் காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகு வாய் யாக்கை அப் புறத்து அகத்தது அம்மா !

பொருள் 


முடங்கு வால் உளை = வளைந்த, சிலிர்த்த அந்த பிடரி மயிர்

அவ் அண்டம் முழுவதும் = இந்த அண்டம் முழுவதையும்

முடிவில் உண்ணும் = இறுதியில் அழிக்கும்

கடம் கொள் = கடமை கொண்ட

வெங் காலச் செந் தீ =வெங்காலம் என்றால் ஊழிக் காலம்,. அந்த காலத்தில் தோன்றும் சிவந்த தீ

அதனை வந்து  அவிக்கும் = அந்த தீயையும் காலால் மிதித்து அவிக்கும். ஏதோ சிறு நெருப்பு பொறியை நாம் காலால் மிதித்து அணைப்பதை போல ஊழித் தீயை அவித்து விடும்.

கால மடங்கலின் உயிர்ப்பும் = காலனை போன்ற அந்த நரசிங்கத்தின் மூச்சு காற்று

மற்று அக் காற்றினை மாற்றும் = அந்த ஊழிக் காற்றையும் மாற்றிப் போடும்

ஆனால் = ஆனால்

அடங்கலும் = இந்த பிடரி மயிரும், இந்த உயிர்ப்பும்

 பகு வாய் யாக்கை = பிளந்த வாயை உடைய அந்த சிங்கத்தின்

 அப் புறத்து அகத்தது அம்மா ! = அந்தப்புறத்தில் , உள்ளே இருந்தது.. அல்லது உள்ளேயும் வெளியேயும்  இருந்தது. இந்த தொடருக்கு எனக்கு சரியாக அர்த்தம் தெரியவில்லை. ரொம்ப தேடித் பார்த்து விட்டேன். ஒன்றும் கிடைக்க வில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் கேட்டுக் கொள்ள  ஆவலாய் இருக்கிறேன். அது என்ன "அப்புறத்து அகத்து"

எனக்கு என்னமோ தோன்றுகிறது....கம்பன் அந்த நரசிமத்தின் தேஜஸில் மயங்கி சொல்ல  வந்ததை  சொல்ல முடியாமல் தடுமாறுகிறான் என்று.

ஒரு பெண்ணை காதலித்தால், அவள் பார்க்கும் ஒரு பார்வை எப்படி என்று நம்மால் சொல்ல முடியுமா ?  நரசிம்மத்தின் அழகை, அதன் ஆக்ரோஷத்தை, அதன் தேஜசை எப்படித்தான் சொல்லுவது....

கம்பனே ஆனாலும் வார்த்தை முட்டும் இடம் இது.....என்பது என் அப்பிப்ராயம்.

அருணகிரிக்கு , முருகன் இரண்டே வார்த்தை தான் சொன்னார். அதுக்கு பொருள் தெரியவில்லையே என்று கூறுகிறார் அருணகிரி.

""சும்மா இரு"அற  சொல் என்றதுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பார் அருணகிரி பெருமான்

ஒரு மிகப் பெரிய அருவியின் முன் நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஹோ என்ற சப்த்தத்துடன் நீர் கொட்டுகிறது.. நீர் திவலைகள் காற்றில் மிதந்து வந்து உங்கள் உடல் நனைக்கிறது.. அந்த நீர் தெறித்த மேகத்தில் சூரிய ஒலி ஒரு குட்டி வானவில் வரைந்து பழகுகிறது.

"அந்த அருவி எப்படி இருக்கு " என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

இங்கும் பொருள் தெரியாமல் அந்த பிரமாண்டத்தின் முன் நிற்கிறான் கம்பன்.....

அவன் சொல்ல முடியாமல் நின்றதிலும் ஒன்றை சொல்லுகிறான். 

உங்களுக்கு புரிகிறதா ?


1 comment:

  1. உன் விளக்கம் இல்லாமல் புரிந்து கொண்டிருக்க முடியாது. நன்றி.

    அப் புறத்து அகத்தது - அந்த மறுபுறத்தை தனக்குள்ளே கொண்டது என்று பொருளாகுமோ?! அப்படி என்றால் என்ன??

    ReplyDelete