Pages

Monday, June 10, 2013

வாலி வதம் - எது அறம் ?

வாலி வதம்  - எது அறம் ?


அறம் என்பது மிக நுட்பமானது.

எவ்வளவு நுட்பமானது என்றால் இராமனுக்கே அது பற்றி இரண்டு எண்ணங்கள் இருந்ததாக கம்பன் காட்டுகிறான்.

பொய் சொல்வதா அறமா என்றால் - இல்லை.

ஆனால் வள்ளுவன் சொல்லுகிறான் - பொய்மையும் வாய்மையிடத்து என்று. பொய்யும் சில சமயம் உண்மையாக மாறும். எப்போது என்றால் சந்தேகத்துக்கு இடம் இல்லாத நன்மை பயக்கும் சமயத்தில்.

தூதரையும் மாதரையும் கொல்லக்  கூடாது என்பது இராமன் கற்ற அறம் .

பெரியோர் சொல்வதை கேட்க வேண்டும் என்பதும் அவன் கற்ற அறம்.

இங்கே விஸ்வாமித்திரன் சொல்கிறான், ஒரு பெண்ணை கொல் என்று.

இராமன் என்ன செய்தாலும், என்ன செய்யாவிட்டாலும் அறம் பிறழ்ந்தவனாவான் .

என்ன செய்யாலாம் ?

இராமனே சொல்கிறான் - அறமே இல்லாவிட்டாலும், ஐயனே நீ சொல்வதை கேட்டு அதன்படி செய்வது தானே அறம் செய்யும் வழி என்கிறான்.

இராமனுக்கு அது வரை கிடைத்தது புத்தக அறிவு. குரு குலத்தில் அப்போது தான்  வந்து இருக்கிறான்.

நான் படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று இராமன் இறுமாப்பு கொள்ளவில்லை. "அய்யன், நீ சொல்வதே அறம் செய்யும் வழி" என்று பெரியவர்கள் சொல்வதை கேட்க்கிறான்.

பாடல்

ஐயன் அங்கு அது கேட்டு. ‘அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.


பொருள்





ஐயன் அங்கு அது கேட்டு = ஐயனாகிய இராமன் அங்கு, அது (தாடகையை கொல் ) கேட்டு

‘அறன் அல்லவும் எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால் = அறம் அல்லாதது என்று வந்தாலும், அதை நீ செய் என்று சொன்னால் 

மெய்ய! =மெய்யானவனே 

நின் உரை வேதம் எனக் கொடு = உன்னுடைய உரையை வேதம் என்று கொண்டு

செய்கை அன்றோ! = அதை செய்வது அன்றோ

அறம் செயும் ஆறு’ என்றான்  = அறம் செய்யும் வழி என்றான்.

(ஆறு = வழி)

பெரியோர்கள் சொல்வதை கேட்பதை தன் வழியாகக் கொண்டு இருந்தான் இராமன். புத்தகங்கள் சொல்லும் அறம் பெரியோர்கள் சொல்லும் அறத்திற்கு அடுத்த  படிதான்.

பெரியோர்கள் என்றால் யார் - துறவோர் என்கிறது தமிழ்.

ஏன் ?

துறவோன் நடு நிலை தவற மாட்டான். அவனுக்கு இலாப நோக்கு கிடையாது.

அறம் சொல்ல வந்த வள்ளுவர் முதலில் இறை வணக்கம் சொன்னார், இரண்டாவது வான் சிறப்பு  சொன்னார், மூன்றாவது சொன்னது "நீத்தார் பெருமை"

அறம் இறைவனிடம் இருந்து வந்தது

அறம் மழையின் மூலம் நிலைக்கிறது.

அப்படிப்பட்ட அறத்தை மக்களுக்கு சொல்பவர்கள் இந்த துறந்தோர்.

விஸ்வாமித்திரன் ஒரு துறவி. அவன் சொல்வதை கேட்டு, அதுவே வேதம் என்று  செயல்பட்டான் இராமன்.

இதை  வாலி வதம் என்ற தலைப்பில் எழுதக் காரணம் ?

ஒரு வேளை இராமனுக்கு யாரவது பெரியவர்கள், துறவி - ஏதாவது சொல்லி  இருப்பார்களோ  ?

பார்ப்போம்....

1 comment: