Pages

Friday, June 21, 2013

நள வெண்பா - நாணம் என்னும் தறி

நள வெண்பா - நாணம் என்னும் தறி 


தமயந்திக்கு, நளன் மேல் அவ்வளவு காதல். அவனை அப்படியே இறுக கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

இறுக என்றால் எவ்வளவு இறுக?

தன் மார்பும், அதில் தவழும் பொன் ஆரமும் நளனின் மார்பில் அழுந்தி மறைந்து போகும் அளவுக்கு இறுக கட்டி அணைக்க ஆசை.

ஆசை என்றால் எவ்வளவு ஆசை ?

யானை அளவுக்கு பெரிய ஆசை.

ஆனால், இந்த பாழாய் போன நாணம் இருக்கிறதே, இத்துணுண்டு தான் இருக்கு, இருந்தாலும் அந்த நாணம் பெரிய யானையை கட்டி அடக்கும் அங்குசம் போல என் ஆசைகளை எல்லாம் கட்டிப் போட்டு விடுகிறதே என்று நொந்து கொள்கிறாள் தமயந்தி....

ஜொள் வடியும் அந்த பாடல்


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்ப புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

சீர் பிரித்த பின்


மன்னன் அகத்துள் அழுந்தி  வார் அணிந்த மென்முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவென் என்று உன்னா 
எடுத்த பேரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

பொருள்





மன்னன் = மன்னனாகிய நளன்

அகத்துள் = உடம்பில், இங்கு மார்பில் என்று கொள்ளலாம்

அழுந்தி = அழுந்தி

 வார் அணிந்த மென்முலையும் = கச்சை அணிந்த மென்மையான மார்புகளும்

பொன் நாணும் = பொன்னால் ஆனா சங்கிலியும் 

புக்கு ஒளிப்ப = புகுந்து ஒளிந்து கொள்ளும் படி (மறையும் படி)

புல்லுவென் = அணைப்பேன்

என்று உன்னா  = என்று எண்ணி

எடுத்த பேரன்பை = எடுத்த பேரன்பை

இடையே புகுந்து = இடையில் புகுந்து

தடுத்ததே நாணாம் தறி = தடுத்ததே நாணம் என்ற தறி (தறி = யானையை கட்டி வைக்கும் கம்பு. யானை போல் வந்த ஆசையை நாணம் கட்டி வைத்து விட்டது)





4 comments:

  1. பெண்களின் ஜொள்ளு கொண்ட பாடல்கள் நிறைய இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அந்த வரிசையில் இது ஒரு அரிய, இனிய பாடல். இன்னும் இருந்தால் தரவும். நன்றி.

    ReplyDelete
  2. அழகான பாடல். நன்றி.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்.

    ReplyDelete