Pages

Saturday, June 8, 2013

திருக்குறள் - உயரும் வழி

திருக்குறள் - உயரும் வழி 


வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பாத ஆள் யார் ? எல்லா உயிர்களும் உயர்வையே விரும்புகின்றன.

நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நல்ல புகழ் பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.

ஆனால் இந்த படிப்பு, பணம்,புகழ் எல்லாம் எப்படி வரும் ?

ஒரு நாள் இந்த கேள்வியை ஒரு மாணவன் திருவள்ளுவரிடம் கேட்டான்.

வள்ளுவர்: வா, நாம் அப்படி நடந்து கொண்டே இதை பற்றி பேசுவோம் என்றார்

இருவரும் அப்படியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அவர்கள் ஒரு குளத்தை கண்டார்கள். அதில் கொஞ்சம் தாமரை, அல்லி மலர்கள் இருந்தன.

வள்ளுவர்: தம்பி, இந்த குளம் எவ்வளவு ஆழம் இருக்கும் ?

மாணவன்: ஐயா ஒரு பத்து பதினைந்து அடி இருக்கும்.

வ: அப்படி என்றால் இந்த தாமரை செடிகளின் உயரம் எவ்வளவு இருக்கும் ?

மா: ஐயா, அதுவும் பத்து பதினைந்து அடி தான் இருக்கும்.

வ: சரி, இந்த தாமரையை இன்னும் கொஞ்சம் உயரமாக ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும் ?

மா: ஐயா, தாமரை கொடி போன்றது. அதை கொஞ்சம் மேலே தூக்கி, ஒரு கம்பில்  கட்டி வைத்து விட்டால் அதை பற்றிக் கொண்டு அது வளர்ந்து உயரமாகி விடும்


வ: சிரித்துக் கொண்டே, சரி, செய்து பார் என்றார்.

மாணவனும் குளத்தில் இறங்கி ஒரு தாமரை மலரை பிடித்து கொஞ்சம் லேசாக இழுத்தான்...அது கையோடு அறுந்து வந்து விட்டது. அதை தூக்கி குளத்தில் எறிந்து விட்டு, இன்னொரு பூவை அதே போல் சிறிது எச்சரிக்கையோடு இழுத்தான் . அதுவும் அதே போல் அறுந்து வந்து விட்டது.

மா: ஐயா, இது சரி வரவில்லை. நாளை இது பற்றி யோசித்து வந்து சொல்லுகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்


மறு நாள், இருவரும் அதே குளத்திற்கு சென்றார்கள்.

முதல் நாள் பெய்த மழையில் குளத்தில் நாலைந்து அடி நீர் ஏறி இருந்தது. மலர்கள் எல்லாம்  அவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தது.

மாணவன் வள்ளுவரைப்  பார்த்தான்.

வள்ளுவர் அவனைப் பார்த்து சிரித்தார்.

தம்பி, நீர் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவு தான் பூக்களின் உயரம் இருக்கும்.

மனிதனை இரண்டாக பிரித்துக் கொள்.

அகம். புறம் என்று .

அகம் எவ்வளவு வளர்கிறதோ, அந்த அளவுதான் புறம் வளரும்.

அகம் என்றால் - மனம். உன் மனம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுதான் உன் வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கும்..

நிறைய பேர் உயர்வு பெற்றோர் மூலம், உறவினர் மூலம், நண்பர்கள் மூலம், இப்படி எங்கிருந்தோ வெளியில் இருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உயர்வு வெளியில் இருந்து வராது.

உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மனம் உயர, வாழ்வு உயரும்.

அக வாழ்க்கை உயர, புற வாழக்கை உயரும். 

பாடல்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

பொருள் 

வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனைய உயர்வு.



1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete