Pages

Tuesday, June 11, 2013

திருக்குறள் - இரக்கப்படுவது தவறு

திருக்குறள் -  இரக்கப்படுவது தவறு


என்னது ? இரக்கப் படுவது தவறா ?

இது என்ன புதுக் கதை என்று நீங்கள் வியக்கலாம்.

வள்ளுவர் அப்படிதான் சொல்லுகிறார்.

இரக்கப் படுவது தவறுதான், எது வரை என்றால் நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவன் முகம் மகிழ்ச்சியாகும் வரை.

உங்களிடம் ஒருவன் பசி என்று வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஒரு நாலு இட்டிலி கொடுத்தால் பசி தீரும் என்று கொள்வோம்.

ஐயோ, பாவம்...ரொம்ப பசியா இருக்கியா ..இந்தா 10 பைசா என்று அவனிடம் இரக்கப் பட்டு தருவது தவறு என்கிறார்.

அவன் முகம் இன்முகமாக வேண்டும் ... அதுவரை இரக்கப் படுங்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் இரக்கம் துன்பம் தருவது என்கிறார்.

இன்னா என்றால் இன்பம் அல்லாதது. அதாவது துன்பம் தருவது.

உங்களிடம் பசி என்று வந்தவனுக்கு பத்து பைசா கொடுத்துவிட்டு அவன் முகத்தை பாருங்கள். முதலில் பசி மட்டும் இருந்தது. இப்போதும் ஏமாற்றமும்இருக்கும். அது மட்டும் அல்ல, உங்கள் மேல் வெறுப்பும் , இந்த உலகின் மேல் சலிப்பும், படைத்தவன் மேல் ஒரு கோபமும் உண்டாகும்.

அவன் பசிக்கு உணவளித்துப் பாருங்கள். உங்களை வாழ்த்துவான். மனம் நிறையும்.

ஒண்ணும் இல்லாததற்கு பத்து பைசா நல்லது தானே என்று வாதம் புரியலாம். நல்லதுதான். வள்ளுவர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த இரக்கம் நன்மை பயக்காது என்கிறார்.

யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மனம் மகிழும்படி உதவி செய்யுங்கள்.

வலியும் , ஏமாற்றமும், பயமும் கொண்ட அவர்கள் முகம் இன்முகமாக மாற வேண்டும். அதுவரை, உங்கள் இரக்கம் இன்னாததுதான்

ஒருவன் கேட்பது எல்லாம், நம்மால் கொடுக்க முடியுமா என்று கேட்டால், பிச்சை கேட்பவன் அப்படி கேட்க மாட்டான். இரப்பவன், எவ்வளவு குறைத்து கேட்க்க முடியுமோ அவ்வளவு குறைத்து கேட்ப்பான்.

உலகளந்த பெருமாளே, யாசகம் கேட்க்க வந்தபோது கூனி குறுகி வாமன உருவமாய்த் தான் வந்தான்.

கேட்பவன், கூச்சப் பட்டு மிக மிக குறைத்துத்தான் கேட்பான்.

எவ்வளவு நுண்ணிய பொருள் நிறைந்தது திருக்குறள்.

தானம் செய் என்று அறம் சொல்ல வந்த வள்ளுவர் எப்படி சொல்லுகிறார் பார்த்தீர்களா ?

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்யும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பாடல்  

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


பொருள்





இன்னாது இரக்கப் படுதல் = இரக்கப் படுவது துன்பம் தருவது

இரந்தவர் = யாசகம் கேட்டவர்

இன்முகங் காணும் அளவு = இனிய முகம் காணும் அளவு


1 comment:

  1. என்ன அருமையான குறள்! இதுவரை நான் கேட்டிராத ஒன்று.

    ReplyDelete