Pages

Sunday, June 9, 2013

பிரகலாதன் - சொல்லும் வேலும்

பிரகலாதன் - சொல்லும் வேலும் 




பிரகலாதன் இறைவனை பற்றி மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போகிறான். அவன் சொல்வதை கேட்ட இரணியன் கோபம் கொண்டு அவன் வீரர்களை பார்த்து "அவனை கொல்லுங்கள் " என்கிறான். கூற்றினும் கொடிய அந்த அரக்கர்கள் பிரகலாதனை கொல்ல நினைத்து அவன் மேல் வேல்களையும், வாட்களையும், கூரிய அம்புகளையும் எய்தனர்.

அவை என்ன ஆயிற்று தெரியுமா ?

அவை பிரகலாதனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க வில்லை என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

எறிந்ததோ கொடிய அரக்கர்கள்.

எறியப்பட்டதோ கூரிய ஆயுதங்கள்.

எப்படி இன்னல் விளைவிக்காமல் இருக்கும் ? அதை சொல்ல வந்த கம்பன் ஒரு உதாரணம் சொல்லுகிறான்.

அந்த ஆயுதங்கள் பகைவர்கள் நம் மேல் வீசும் கொடிய வார்த்தைகள் போல பயனற்று போயின என்றான்.

நம் எதிரிகள் நம் எதிரில் நின்று எவ்வளவு கொடிய சொற்களை நம் மீது கூறினாலும் அது எப்படி நம்மை பாதிக்காதோ அப்படி ஆயிற்று என்கிறான் கம்பன்.

பாடல்


'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்
"ஏ" என் மாத்திரத்து எய்தன, எறிந்தன, எறிதொறும் எறிதோறும், -
தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன - அத்துணை மழுவொடு கொலை வாளும்.

பொருள் 



தாயின் = தாயைப் போல

மன்னுயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு

அன்பினன்தன்னை = அன்பு கொண்ட அவனை

அத் = அந்த

தவம் எனும் = தவம் என்ற

 தகவு இல்லோர் = பண்பு இல்லாதோர்

"ஏ" என் மாத்திரத்து = ஏ என்று சொல்லுவர்தற்குள்

எய்தன, எறிந்தன = எய்ததும் எறிந்ததும் ,

எறிதொறும் எறிதோறும் = எறிய எறிய

தூயவன்தனைத் = தூய்மையான அந்த இறைவனை

துணை என உடைய = துணை என்று கொண்ட

அவ் ஒருவனைத் = அந்த ஒருவனை (பிரகலாதனை)

துன்னாதார் = பகைவர்

வாயின் வைதன ஒத்தன = வாயில் வைததை ஒத்தன

அத்துணை = அத்தனை

மழுவொடு கொலை வாளும் = மழுவும் கொலை வாட்களும்

அதாவது அந்த வாட்களும் மழுக்களும் அவன் மேல கூட படவில்லையாம்

சொல்லை வைத்து கம்பன் விளையாடிய இன்னும் ஒரு சொல் விளையாட்டு.


பகைவன் எவ்வளவு வலிமை உள்ளவனாக இருந்தாலும், இறை அருள் இருக்கும் போது  மாற்றான் வலி,  வலி செய்யாது என்பது பொருள்.


1 comment:

  1. துன்னாதார் வாயின் வைதன ஒத்தன - சபாஷ்!

    ReplyDelete