Pages

Wednesday, July 10, 2013

திருக்குறள் - காதலியின் கடிதம்

திருக்குறள் - காதலியின் கடிதம் 


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.



காதலியிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்து இருக்கிறதா ?

முதன் முதலில் அவள் எழுதிய கடிதம் இருக்கிறதே...அதற்கு ஈடு இணை கிடையாது. அது தான் உலகத்தில் உள்ள இலக்கியங்களிலேயே மிக உன்னதமான இலக்கியம்.

அது தரும் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவும் தராது. அந்த காகிதத்தை தொட்டுப் பார்த்தால் அவள் விரலைத் தொடுவது மாதிரி இருக்கும்.

அந்த காகிதத்தில் அவள் மனம் மணம் வீசும்.

உச்சி வெயிலில் அந்த கடித்ததை படித்தால் கூட உள்ளுக்குள் குளிர் காற்று வீசும்.

அதைப் படிக்கும் போது பசி தாகம் போய் விடும்.

நட்சத்திரங்கள் காதில் வந்து இரகசியம் பேசும்.

பசி சுகமாய் இருக்கும்.

நிலவு உங்களைப் பார்க்கும் புன்னகை வீசும்.

தெருவோர மரங்கள் சில பல பூக்களை நீங்கள் நடக்கும் வழியில் உதிர்க்கும்.

கால்களுக்கு இறக்கை முளைக்கும்.

அந்த மேகங்கள் உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் இருக்கும்.

தொலைக் காட்சியில் வரும் அத்தனை பாடல்களும் இனிமையாக இருக்கும்.

படம் வரையத் தோன்றும்.

கவிதை ஊற்று பொங்கும். வார்த்தைகள் எல்லாம் காணாமல் போகும். வெற்றுத் தாளில் எழுதாத கவிதை ஆயிரம் இருக்கும்.

அவள் எழுதிய கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உங்களை கை நீட்டி அழைப்பது போல இருக்கும்.

அம்மாவும், தங்கையும், அக்காவும் தேவதைகளாகத் தெரிவார்கள்.

பாடல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள் 

தொடலைக் = மாலை அணிந்த அவள். தங்கச் செயின் என்று வைத்துக் கொள்ளுங்களேன்

குறுந்தொடி = தொடி என்றால் வளையல். குறுந்தொடி என்றால் சின்ன சின்ன வளையல், அணிந்த அந்தப் பெண்

தந்தாள் = தந்தாள்

மடலொடு = மடல் என்றால் லெட்டர். மடலொடு என்றால் லெட்டர் கூட வேறு ஒன்றையும் தந்தாள்


மாலை உழக்கும் துயர் = மாலை நேரும் தரும் துயரையும் தந்தாள்.

இந்த காதல் மத்த நேரங்களில் இருக்கும் என்றாலும், மாலை நேரத்தில் ரொம்பவும் படுத்தும். அப்படி படுத்தும் துன்பத்தை அவள் தந்தாள். அவளை பார்பதற்கு முன்  இந்த துன்பம் இல்லாமல் இருந்தது. இப்பதான் இந்த இம்சை.

அவளுடைய மடல் இந்த துன்பத்திற்கு மருந்து போல. ஒரு ஆறுதல் போல. அவளைப் பார்க்க முடியாவிட்டாலும் , அவளுடைய லெட்டெரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம்.

இல்லை இல்லை...இந்த லெட்டெர் எங்க ஆறுதல் தருது...

இதை படிக்க படிக்க அவளை இப்பவே போய் பாக்கனும்னு தோணுது...நாளைக்கு அவளைப் பார்க்கும் போது  எப்படி இருப்பாள்...வெட்கப் படுவாளா ....

இது எல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்னு வள்ளுவர் சொல்றார்...எனக்கு என்ன தெரியும்....



1 comment:

  1. வள்ளுவர் ஒரு ஜொள்ளு பார்ட்டி. நீ அதுக்கு மேலே ஒரு ஜொள்ளு பார்ட்டி!

    "காதலி கடிதத்துடன் மாலை நேரத் துயரையும் தந்தாள்" என்ற பாடலுக்கு, நீ என்னடா என்றால் "கடிதத்தால் பலவித இனிமைகளைத் தந்தாள்" என்று பொருள் கொண்டிருக்கிறாய்! ஒரு பாடலில் அதன் நேர் எதிர் மறையான பொருளை, உன் ஜொள்ளு உணர்வால் கண்டிருக்கிறாய்! சரியான ஆளப்பா நீ!

    ஆனால், உன் விளக்கத்தின் முகவுரை, சும்மா வைரமுத்து பாணியில் ... அருமை!

    ReplyDelete