Pages

Friday, July 19, 2013

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை 



அபிராமி யார் ?

தாயா ? தாரமா ? காதலியா ? அக்காவா ? தோழியா ? தேவதையா ? மகளா ?  எல்லாமும் கலந்த ஒரு பெண் வடிவா ?  

பெண்ணின் அத்தனை அம்சங்களும் நிறைந்தவள் அவள். 

கோமள வல்லி  -  மென்மையானவள். அவள் கை, அவள் மடி அவ்வளவு மேன்மை. அவள் பார்வை மனதை  போகும் தென்றல். அவள் பாதம்...பஞ்சை விட மென்மை 

அவள் மிகவும் குளிர்ந்தவள் - அவள் இருக்கும் கோவில் அல்லியும் தாமரையும் நிறைந்த குளங்கள் சூழ்ந்தது. அவ கிட்ட போனாலே ஒரு மலரின் மணம் மனதை நிறைக்கும்.

அவள் கணவனோடு இரண்டற கலந்தவள் - யாமள வல்லி 

அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் - கள்ளம் இல்லா முகம். ஒரு குறை இல்லா அழகு. பார்த்தாலே மனம் எல்லாம் நிறைந்து போகும். ஏதம் (குற்றம்) இல்லாதவள் 


அவளை விட்டு பிரியவே மனம் வராது. வீட்டுக் போன பின் அவள் நினைவு வந்ததாள்  என்ன செய்வது ? அவளை பார்க்க வேண்டும் போல இருந்தாள் என்ன செய்வது ? அவளுடைய போட்டோ அல்லது படம் ஏதாவது வரைந்து எடுத்துச் செல்லாலம் என்றால் எழுத்தில் கொண்டு வரமுடியாத அழகி அவள். அவளை பார்க்க வேண்டும் என்றால் நேரில் தான் போய் பார்க்க வேண்டும். அவ்வளவு அழகு. 

மயில் போன்ற சாயல் உடையவள். ஒரு சிலிர்ப்பு, ஒரு நளினம்...கண் கொள்ளா காட்சி...

பட்டருக்கு அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்....

நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு வேலை இருக்கிறது. வீடு, வாசல், மனைவி, மக்கள், வேலை, சுற்றம், டிவி சீரியல், வார மாத பத்திரிகைகள், அரட்டை, பல்வேறு விழாக்கள் ....என்ற ஆயிரம் வேலை இருக்கிறது. 

இதற்கு நடுவில் அபிராமியை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது. 

பட்டர் நம் மேல் அத்தீத வாஞ்சையுடன், " உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வணங்கினால் போதும்...அபிராமி ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்வாள்....உங்களை ஏழு உலகுக்கும் அதிபதி ஆக்கி விடுவாள் " என்கிறார். 

பாடல் 

கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

பொருள் 



கோமளவல்லியை = மென்மையானவளை 

 அல்லியந்தாமரைக் கோயில் வைகும் = அல்லியும் தாமரையும் நிறைந்த கோவிலில் இருப்பவளை 

யாமளவல்லியை = இறைவனோடு (சிவன்) ஒன்றாகக் கலந்தவளை 

ஏதம் இலாளை = குற்றம் எதுவும் இல்லாதவளை 

எழுதரிய = எழுத்தில் வர்ணிக்க முடியாதவளை  

சாமள மேனிச் = சாம்பல் நிறம் கொண்டவளை 

சகலகலாமயில் = கலை அழகு கொண்ட மயில் போன்றவளை 

தன்னை = அவளை 

தம்மால் = நம்மால் 

ஆமளவும் = முடிந்த அளவுக்கு 

தொழுவார் = வணங்குபவர்கள் 

எழு பாருக்கும் ஆதிபரே = ஏழு உலகுக்கும் அதிபர் ஆவார்கள் 


1 comment:

  1. பட்டர் எழுதியது எவ்வளவோ, அதற்குப் பன்மடங்கு உன் கற்பனையால் நிறைத்து விட்டாய்!!

    ReplyDelete