இராமாயணம் - வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ?
துன்பம் மனிதனை எப்படி பக்குவப் படுத்துகிறது.
இராமனுக்கு மணி முடி கிடையாது என்று கேட்டபோது "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்று சண்டமாருதம் போல் கோபத்தோடு கிளம்பிய இலக்குவன் எப்படி மாறிப் போனான்.
இராமன் , இந்த மானின் பேச்சை கேட்டு அந்த மானின் பின் போனான்.
இராமனுக்கு ஏதோ ஆபத்து நீயும் போ என்று இலக்குவனை போகும்படி சொல்கிறாள் சீதை.
இலக்குவன் சொல்கிறான் "எங்க அண்ணாவின் கோதண்டம் காதண்டம் வளையுமுன் இந்த மூவண்டம் அதிரும்...எங்க அண்ணாவுக்கு எப்படி ஆபத்து வரும் " என்று கூறி போக மறுக்கிறான்.
நீ போகாவிட்டால் நான் உயிரை விடுவேன் என்கிறாள்.
இலக்குவன் சொல்கிறான்
பாடல்
'துஞ்சுவது என்னை? நீர் சொன்ன
சொல்லை யான்
அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம்
தீர்ந்து இனி,
இஞ்சு இரும்; அடியனேன்
ஏகுகின்றனென்;
வெஞ் சின விதியினை
வெல்ல வல்லமோ?
பொருள்
'துஞ்சுவது என்னை? = துஞ்சுதல் என்றால் தூங்குதல். சீதை உயிரை விடுவேன், இறப்பேன் என்று சொன்னாள். இலக்குவன் அந்த வார்த்தையை கூட சொல்ல அஞ்சுகிறான். தூங்குவதற்கு என்தற்கு என்று கேட்கிறான்.
நீர் சொன்ன சொல்லை யான் அஞ்சுவென் = நீங்க சொன்ன சொல்லை கேட்டு நான் அச்சப் படுகிறேன்
மறுக்கிலென் = உங்கள் கட்டளையை மறுக்க மாட்டேன்
அவலம் தீர்ந்து = துன்பம் நீங்கி
இனி = இனிமேல்
இஞ்சு இரும் = இங்கேயே இருங்கள்
அடியனேன் ஏகுகின்றனென் = அடியேன் போகிறேன்
வெஞ் சின விதியினை = வெம்மையான சினந்த விதியை
வெல்ல வல்லமோ? = நம்மால் வெல்ல முடியுமா ? (முடியாது )
நாள் ஆக ஆக மனிதன் விதியை நம்பத் தலைப்படுகிறான். வாழ்க்கையில் அடி படும்போது மனித யத்தனத்தின் எல்லை புரிகிறது. தன்னால் எல்லாம் முடியாது என்ற ஞானம் பிறக்கிறது.
1. கம்ப ராமாயணப்படி, "நீ என்னை விரும்புகின்றாய்" என்று சீதை இலக்குவனைப் பார்த்துச் சொன்னாளா?
ReplyDelete2. எதிரியாய் இருந்தால் சண்டைக்குக் கிளம்பலாம். இந்த மாதிரி தன் அண்ணியே சாகப் போகிறேன் என்று பயமுறுத்தினால் என்ன செய்வது? பாவம் இலக்குவன், விதியை நொந்து கொள்கிறான்.
3. இந்தப் பெண்களே இப்படித்தான்: Black-mail செய்தே காரியத்தை முடித்துக் கொள்கிறார்கள்!